

இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படும் சில விளம்பரங்களின் சொற்பிரயோகங்கள் செந்தில் பாலாஜியைவிடவும் அதிகமாக நம்மைச் சோதனைக்குள்ளாக்குபவை. ஆவி பறக்கும் உணவை ஆவலுடன் வாயில் வைக்கும்போதுதான், மோப்பம் பிடித்தது போல ‘டாய்லெட் க்ளீனர்’ குறித்த விளம்பரங்கள் வரும்; அந்த விளம்பரங்களில் முக்காலே மூணு வீசம் அக்ஷய் குமார்தான் தோன்றுவார் என்பதெல்லாம் ‘மோட்டு பத்லு’ பார்க்கும் மூன்று வயதுக் குழந்தைக்குக்கூடத் தெரிந்த விஷயம். அதுவல்ல சமாச்சாரம்!
ஒரு விளம்பரத்தில், பினாயிலைக் கையில் வைத்துக் கொண்டு ஒரு பெண்மணி, “அந்த ‘டேஷ்’ பிராண்ட் டாய்லெட் க்ளீனர் அளவுக்கு இது சுத்தம் செய்யாவிட்டால் பரவாயில்லை... அதனால் என்ன இப்போ?” என்று பொருள்படும்படி இந்தியில் பேசுவார்.
அதற்கு, “ஒரு விருந்தினர் உங்கள் கழிவறை பக்கம் போகும்போது உங்கள் நெஞ்சம் பதறுமே... அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று அச்சுறுத்தலாக அறிவுறுத்தத் தொடங்குவார் அக்ஷய். அதாவது, ‘அப்படி ஒரு சூழலில் எப்படி இருக்கும் உங்களுக்கு?’ என்று கேட்பதாகப் பொருள் கொள்ளலாம்.
‘தோ க்யா?’ என்று அந்தப் பெண்ணும், ‘உஸ்கா க்யா?’ என்று அக்ஷயும் தத்தமது வாக்கியத்தின் கடைசி வார்த்தைகளாகப் பயன்படுத்துவார்கள் - ஆங்கிலத்தில், ‘What if?' என்பார்களே, அதுபோல. தமிழில் கவலையேபடாமல் இரண்டையும், ‘அதுக்கு என்ன?’ என்று கச்சாவாக மொழிபெயர்த்திருப்பார்கள்.
இன்னொரு விளம்பரத்தில், ‘ஆஜ்கல் யஹீ சல்தா ஹை’ என்று ஒரு வாசகம் வரும். இடத்தைப் பொறுத்து இதை, ‘இப்பல்லாம் எங்கே பார்த்தாலும் இதுதான்’ என்றுகூட மொழிபெயர்க்கலாம். ஆனால், ‘இப்பல்லாம் இதுதான் போகுது’ என்று எக்குத்தப்பாக மொழிபெயர்த்திருப்பார்கள். ‘சல்தா ஹை’ என்றால் ‘போகிறது’, ‘போகிறான்’ என்பதுதான் பொருள். ஆனால், அதையும் தாண்டி பேச்சுவழக்கில் அதன் பொருத்தப்பாடு, பயன்பாடு நிறைய.
இப்படியெல்லாம் பிரச்சினை வரக் கூடாது என்பதற்காகவே, சில ஆங்கில சேனல் நிகழ்ச்சிகளின் தமிழ் வடிவத்தில், ‘அந்த அனிமலுக்கு ரொம்ப ஆங்க்ரி வந்துடுச்சு. ரொம்ப ஃபாஸ்ட்டா மூவ் பண்ணுது. டேஞ்சரஸான சிச்சுவேஷனா இருக்கு’ என்று ஆங்கில வார்த்தைகளுக்கு நடுவே ஆங்காங்கே தமிழைப் போட்டுத் தப்பித்துக்கொள்வார்கள். பார்த்தால் நமக்கே ‘டென்ஷன்’ ஆகிவிடும்!
காட்சியின் முழுமையான பின்னணி குறித்து மொழி பெயர்ப்பாளர்களுக்குப் பெரும்பாலும் சொல்லப்படுவதில்லை. சம்பந்தப்பட்ட காட்சிகளைப் பார்த்து, உணர்ந்து எழுதவும் வாய்ப்பிருக்காது. எழுத்து வடிவத்தில் வரும் இந்தி, ஆங்கில வாசகங்களைச் சரியாக உள்வாங்காமல் தமிழ்ப்படுத்துவதால் வரும் சிக்கல் இது.
மூல மொழியில் சொல்லப்படும் விஷயத்தின் தொனியைப் பிடித்துவிட்டாலே, மொழிபெயர்ப்பில் முக்கால்வாசி கிணற்றைத் தாண்டிவிடலாம். தொனியில் சின்ன மாற்றம் செய்தாலும் சேதாரம், செய்கூலி எல்லாவற்றையும் எதிர்கொள்ள நேரும்.
டெல்லி நண்பர் குமரன் சொன்ன அனுபவம் இதற்கு உதாரணம். சிஆர்பிஎஃப் வீரரான குமரன், வேலைக்குச் சேர்ந்த புதிதில் கொஞ்சம் தெரிந்த இந்தியும் குவியல் குவியலான பொருள்களுமாக சக தமிழ் வீரர்களுடன் அலிகரிலிருந்து வாராணசிக்கு அலுவல் நிமித்தம் ரயிலில் சென்றிருக்கிறார்.
பயணச்சீட்டுப் பரிசோதகர் வந்து சுமைகளைப் பற்றிக் கேட்டபோது, “எல்லாம் ஸ்டேஷனரி சாமான் சார். வேண்டுமென்றால் கையை வைத்துப் பாருங்கள் (ஹாத் லகாக்கே தேக் லோ)” என்று குமரன் இந்தியில் சொல்லியிருக்கிறார். அது பரிசோதகருக்குப் பரிகாசமாகப் பட்டிருக்கிறது. ‘நாங்கள் ராணுவ வீரர்கள். முடிந்தால் எங்கள் பொருள்கள் மீது கைவைத்துப் பார்’ என்று குமரன் சூளுரைத்ததாக அவர் பொருள் கொண்டுவிட்டார்!
கோச்சைவிட்டு கோபமாகச் சென்றவர், கையோடு ரயில்வே போலீஸை அழைத்து வந்துவிட்டாராம். அவர்கள் அனைவரும் கோபமாக கோஷ்டி கானம் பாடியபோதுகூட, ‘இதுக்கு ஏன்யா இவ்ளோ கொந்தளிக்கிறாய்ங்க?’ என்றே குமரன் யோசித்துக்கொண்டிருந்தாராம். Lost in translation என்று சும்மாவா சொன்னார்கள்!