

கூட்ஸ் வண்டி போய்க்கொண்டிருந்தது. நீளமான ரயில் பெட்டிகளின் கடைசியில் சின்னதாக வீடு போன்ற அறை. அதன் உள்ளிருந்து வெளியே வந்து கொடியசைத்துவிட்டு உள்ளே செல்லும் வெள்ளை பேன்ட், கோட், தொப்பி அணிந்த கார்டு.
சிறுவயதில் இந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு, ‘ஆஹா! என்ன ஆனந்தமான வேலை’ என்று ஆச்சரியப்படுவேன். அதற்குப் பிறகு விமான பைலட், கப்பல் கேப்டன், சிவப்பு விளக்கு சுழலும் காரில் வரும் கலெக்டர் போன்ற வேலைகளை எல்லாம் பார்த்துப் பிரமிப்பதும் அப்படி ஒரு வேலைக்குப் போக ஆசைப்பட்டதும் உண்டு.
எங்கள் கிராமத்துக் கிளை நூலகத்தில் உள்ள கதைப் புத்தகங்களைப் படித்தபோது கதை எழுத ஆசை உண்டாயிற்று. எழுத்தாளர் ஆவதால் கிடைக்கும் புகழ், பெருமை, மாலை, கைதட்டல், அவர்கள் காட்டும் கம்பீரம் எல்லாம் பார்த்து எழுத்தாளர் ஆகிவிட வேண்டியதுதான் என்று தீர்மானம் செய்துகொண்டேன்.
ஆனால், அப்பா என்னை பி.காம். படிக்க வைத்து, அரசுப் பணியில் சேர்த்துவிட்டார். நானோ தஞ்சை ப்ரகாஷின் இலக்கிய ஜமாவில் சேர்ந்துகொண்டு எம்.வி.வி., கரிச்சான் குஞ்சு, க.நா.சு, பிரபஞ்சன் என்று அவர்கள் இலக்கியம் பேசுவதைக் கேட்பதே வேலை எனக் கொண்டேன்.
ஒற்றைச் சொல் பயோடேட்டா: தஞ்சையின் பழைய அரண்மனைக் கட்டிடத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது அங்கு தணிக்கை நிமித்தம் செல்ல நேர்ந்தது. ஒருநாள் கோப்புடன் துணைவேந்தர் முன் நின்றபோது அங்கே க.நா.சு.வைப் பார்த்தேன். க.நா.சு.வும் துணைவேந்தர் டாக்டர் வ.அய்.சுப்பிரமணியமும் புதுடெல்லி ஆல் இண்டியா ரேடியோவில் ஒன்றாக வேலை பார்த்தவர்கள் என்று பின்னர் தெரியவந்தது.
க.நா.சு. என்னைப் பார்த்து, “நீ இங்கேயா இருக்கே?” என்றார்.
“இவரைத் தெரியுமா? ” என்று என்னைக் காட்டி கேட்டார் வ.அய்.சு.
“இவர் ஒரு சிறந்த கவிஞர்” என்றார் க.நா.சு. சிரித்தபடி.
உண்மையில் அன்றுதான் கணையாழியில் என் முதல் கவிதையே பிரசுரமாகியிருந்தது.
“இவரை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்றார் க.நா.சு.
அன்று மதியம் க.நா.சு.வுக்குத் துணைவேந்தர் வீட்டில் விருந்து. மாலை வழக்கம்போல் ப்ரகாஷ் கடையில் எங்கள் சந்திப்பு.
க.நா.சு. தன் கைப்பையிலிருந்து ஒரு பழுப்பு கவரை எடுத்து என்னிடம் நீட்டினார். பிரித்தேன். என்னைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தரின் தனிச்செயலராக அயற்பணியில் நியமிக்கப் படுவதாகக் கண்டிருந்தது!
“உன்னைக் கவிஞன் என்றுதான் சொன்னேன். அதற்காக உன்னைத் தன் செயலாளராகவே போட்டுக்கொண்டுவிட்டார்.”
“சொன்னது க.நா.சு.வாச்சே!” என்றார் ப்ரகாஷ்.
“பரவாயில்லை, ‘கவிஞர்’ என்கிற ஒற்றைச் சொல் பயோடேட்டாவாகிவிட்டது இவனுக்கு” என்று க.நா.சு. சிரித்தார்.
அடுத்த ஏழாண்டுக் காலம் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கருத்தரங்குகள், தமிழ் அறிஞர்கள், பயணங்கள், நியமனங்கள் என்று ஓடிக்கொண்டே இருந்தேன்.
தணிக்கை மறந்துவிட்டது.
தமிழ் பிறந்துவிட்டது!
எழுத்தால் வந்த வினை: எழுத்தால் எனக்குக் கெளரவம் கிடைத்தது போலவே ஆபத்திலும் மாட்டிக் கொண்டிருக்கிறேன். இதைத்தான் ‘தொழில்சார் ஆபத்து’ (Occupational Hazards) என்பார்கள்.
கோயிலுக்குப் போகும் போதெல்லாம் கோயில் யானையை வேடிக்கை பார்த்தபடி நீண்ட நேரம் நிற்பேன். இதை வைத்து ஒரு கதை எழுதினேன். அடுத்த சில வாரங்களில் ஒரு பிரபல வார இதழில் அக்கதை பிரசுரமாகிவிட்டது.
தொடர்ந்து பத்திரிகை ஆசிரியரிடமிருந்து ஒரு கடிதம். ‘அந்தக் கதை தன்னைப் பற்றி எழுதப்பட்டிருப்பதாகவும் அதனால் தன் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிட்டதாகவும் இதற்கு நஷ்ட ஈடாக ஒரு லட்சம் ரூபாய் தரவேண்டும் என்றும் யானைப்பாகனிடமிருந்து வக்கீல் நோட்டீஸ் வந்திருக்கிறது. நீங்கள் கதையில் யானையின் நிஜப் பெயரைக் குறிப்பிட்டுவிட்டீர்கள்!’
நான் செய்த சிறு தவறு, அது தன்னைக் குறிப்பதாக யானைப்பாகன் எண்ணும்படி ஆயிற்று.
நகைச்சுவையாக எழுதப்பட்ட கதை என்றும் யார் மனத்தையும் புண்படுத்தும் நோக்கமில்லை என்றும் ஆசிரியர் வருத்தம் தெரிவித்து வெளியிட்ட குறிப்போடு பிரச்சினை முடிவுக்கு வந்தது.
எங்கே அந்த எழுத்தாளர்? சென்னை நங்கநல்லூரில் வசித்த பழம்பெரும் எழுத்தாளரைப் பேட்டி கண்டு பிரபல வார இதழில் ஒரு கட்டுரை எழுதினேன்.
எழுத்தாளரின் மகனுக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்த நேரம். பையனைப் பிடித்துவிட்டது. பெண் வீட்டார் புறப்பட்டபோது ‘இது என்னுடைய பேட்டி’ என்று எழுத்தாளர் பத்திரிகையை நீட்டியிருக்கிறார்.
ரயிலில் போகும்போது அதைப் படித்த பெண் வீட்டார், கட்டுரையில் எழுத்தாளர் குறிப்பிட்டுள்ள வாக்கியம் குடும்பத்தின் எதிர்கால உடல்நலம் பற்றிய கருத்து எனவும் திருமணத்தை நிறுத்தும்படியும் கூறிவிட்டனர்.
பையனின் கோபம் என் மீது திரும்பியது.
“நீங்கள் சொன்னதை எல்லாம் அவர் எப்படி எழுதலாம்? எடிட் செய்ய வேண்டாமா? எங்கே அந்த ஆள்? அந்த ஆளை உண்டு இல்லைன்னு பண்ணிவிடுகிறேன்” என்று குதித்துவிட்டார்.
எழுத்தாளர் என்னிடம் தொடர்புகொண்டு, “பையன் கோபக்காரன். ஏதாவது செய்துவிடுவான். கொஞ்சகாலம் வெளியே தலை காட்ட வேண்டாம்” என்று எச்சரித்தார்.
அதற்குப் பிறகு பையனுக்கு நல்ல இடத்தில் திருமணமாகிவிட்டது. ஆனாலும், அந்தச் சம்பவம் ஏற்படுத்திய காயத்தின் வடு இன்னும் இருக்கிறது.
நான் ஓர் எழுத்தாளன் என்கிற பெருமை தலைதூக்கும் போதெல்லாம் இப்படியும் அப்படியுமாக எனக்குள் ஒரு கோயில் யானை தலையாட்டுகிறது.
(பேச்சு தொடரும்)