பயண அனுபவம்: இதற்காகவே போகலாம் கொழுக்குமலைக்கு!

பயண அனுபவம்: இதற்காகவே போகலாம் கொழுக்குமலைக்கு!
Updated on
2 min read

நாம் எவ்வளவு தூரம் நடக்கிறோம்? எதுவரை நடக்கிறோம்? ஆனால், சாரா மார்க்வெஸ் என்கிற பெண்ணின் நடை வேற மாதிரி. அவர் உலகின் பல நாடுகளைக் கால்நடையாகவே நடந்து கடப்பவர். ஆங்காங்கு கூடாரம் அமைத்துத் தங்கிக்கொள்வார். அப்படியொரு கூடாரத்தில் ஒருநாள் தங்க வேண்டும் என்கிற எண்ணம் நீண்ட காலமாகவே இருந்தது. கொழுக்குமலையில் அப்படியான வாய்ப்பு கிடைக்கிறது என்று அறிந்தவுடன் பயணத் தைத் தொடங்கிவிட்டோம். இதமான குளிர், சூடான கட்டஞ்சாயா, கூடாரத்துக்குள் மெல்லிய வெளிச்சத்தில் புத்தக வாசிப்பு, அரட்டை எனக் கனவு கண்டுகொண்டே சென்றோம்.

மூணாறிலிருந்து சூரியநெல்லிக்குச் சென்று எங்களுக்காகக் காத்திருந்த ஜீப்பில் ஏறினோம். சுமார் 7 கி.மீ. தொலைவிலுள்ள கொழுக்குமலைக்குச் செல்ல ஒரு மணி நேரமாகும் என்று சொன்னபோதே கொஞ்சம் ஜெர்க் ஆனது. ஊரைத் தாண்டி ஜீப் மலையில் ஏற ஆரம்பித்தபோது, ‘மொபைல் கீழே விழாமல், நன்றாகப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துகொள்ளுங்கள். பயம் ஒன்றும் இல்லை. இயற்கையையும் இந்தப் பயணத்தையும் ரசித்தீர்கள் என்றால் உங்களுக்கு வாழ்நாள் அனுபவமாக இருக்கும்’ என்று ஓட்டுநர் அறிவித்தார்.

கொழுக்குமலைக்கு ‘ஆஃப் ரோடு’ பயணம் என்பதைக் கேள்விப்பட்டிருந்தாலும், அது இப்படியொரு தடாலடி அனுபவமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்தப் பயணத்துக்காகவே எங்கிருந்தோ கொண்டுவந்து போடப்பட்ட பாறைகளோ என்று எண்ண வைத்துவிட்டது அந்தச் சாலை. ஏழு பேரையும் லக்கேஜையும் இழுத்துக்கொண்டு ஜீப் தட்டுத் தடுமாறி ஏற ஆரம்பித்தது. திரும்பிப் போய்விடலாமா என்று சிலர் கேட்க, ஓட்டுநர் எதையும் காதில் வாங்காமல் முன்னேறிக்கொண்டிருந்தார்.

என் அருகில் இருந்த தோழி, “நல்லபடியா மேலே போய்ச் சேர்ந்தா போதும்” என்றவுடன், “என்னங்க மேலே போகணுமா” என்று அலறினார் நண்பர். பயத்தை மறந்து எல்லாரும் சற்றுக் கலகலப்பான மனநிலைக்கு வந்தோம். இப்படியும் அப்படியுமாக ஜீப் குலுங்கி குலுங்கிச் சென்றதில் உடல் புண்ணாகிவிட்டது. ஓரிடத்தில் ஜீப்பை நிறுத்தி, “வியூ பாயின்ட் பாருங்கள், போட்டோ எடுங்கள்” என்றார் ஓட்டுநர். யாருக்கும் இறங்கும் மனநிலையும் இல்லை; உடலும் ஒத்துழைக்கவில்லை. ஒருவழியாகத் தங்கும் இடத்தை அடைந்தோம்.

சூடான பஜ்ஜியும் டீயும் எங்களை வரவேற்றன. லக்கேஜை வைத்துவிட்டு, சூரிய அஸ்தமனம் பார்க்கக் கிளம்பினோம். வியூ பாயின்ட்டும் சூரிய அஸ்தமனமும் மிக அற்புதமாக இருந்ததால், ஜீப் பயணத்தை நாங்கள் மறந்து ரசிக்க ஆரம்பித்துவிட்டோம்.

இருட்டும் குளிரும் போட்டி போட்டுக்கொண்டு நிமிடத்துக்கு நிமிடம் அதிகமாகிக் கொண்டே செல்ல, நாங்கள் தங்கு வதற்கான கூடாரங்கள் தயாராகிக் கொண்டி ருந்தன. சூடான சப்பாத்தியும் குருமாவும் கோழிக்குழம்பும் இரவு உணவாகப் பரிமாறப்பட்டன. தண்ணீர் பனிக்கட்டியைப் போலி ருந்தது. குளிரில் உடல் நடுங்கியது. களைப்புடன் கூடாரத்தை நோக்கிச் சென்றோம். ஒரு கூடாரத்துக்கு மூன்று பேர். நான்கு கூடாரங்கள் இருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாக விளக்குகள் வெளிச்சத்தைத் தந்துகொண்டிருந்தன. குளிரைத் தாங்கும் விதத்தில் கூடாரங்களின் கூரைகள் இரண்டு அடுக்குகளாக இருந்தன. ஒவ்வொருவராக ஸ்லீப்பிங் பேகுக்குள் நுழைந்து கொண்டனர். ஐயோ... என்னுடைய பேக்கில் ஜிப் இல்லை. ஒரு போர்வைபோல போர்த்திக்கொள்ள மட்டுமே முடிந்தது. குளிர் ஊசியாகக் குத்திக் கொண்டிருந்தது. அலுவலகம் சென்று வேறு பேக் வாங்கலாம் என்றால், கடுங்குளிர் அந்த எண்ணத்தைத் தடுத்துவிட்டது.

பல்லைக் கடித்துக்கொண்டு ஒருவழியாகத் தூங்க ஆரம்பித்தபோது, அண்டார்க்டிகாவுக்குச் சென்ற ராபர்ட் ஃபால்கன் ஸ்காட், ரால்ட் அமுண்ட்சென் எல்லாம் ஏனோ நினைவுக்கு வந்தனர். கூடாரத்தின் மேல் கற்கள் விழுவதுபோல் சத்தம். பயத்தில் குரல் கொடுத்தால், பக்கத்துக் கூடாரத்தில் இருந்த நண்பர் மழைதான், பயப்படாதீர்கள் என்றார். காற்றில் கூடாரம் ஆடிக்கொண்டேயிருந்தது. சற்று நேரத்தில் மழையும் காற்றும் ஓய்ந்தாலும் கரடி, மலைப்பாம்பு ஏதாவது கூடாரத்துக்குள் நுழைந்துவிடுமோ என்கிற தேவையற்ற அச்சம் தூக்கத்தைத் துரத்தியது.

அலுப்பில் தூங்க ஆரம்பித்தபோது, மூன்றாவது கூடாரத்துக்கு ஆள்கள் வந்து சேர்ந்தார்கள். ‘கேம்ப் ஃபயர்’ போட்டு, மலையே அதிரும்படி பேச்சும் சிரிப்புமாக இருந்தார்கள். எப்போது தூங்க ஆரம்பித்தோம் என்று தெரியவில்லை, “சன்ரைஸ் ட்ரெக்கிங் போறவங்க வாங்க” என்று ஒருவர் குரல் கொடுத்தார்.

‘அப்பாடி, விடிந்துவிட்டது. பிழைத்துவிட்டோம்’ என்கிற நிம்மதி வந்தது. செங்குத்துப் பாறை மீது ஏற வேண்டும் என்பதால் பலர் கூடாரத்துக்குள் முடங்கிவிட்டோம். சிலர் துணிச்சலாகக் கிளம்பினார்கள்.

ஆறு மணிக்குக் கூடாரத்தை விட்டு வெளியே வந்தோம். இரவெல்லாம் கிலியை ஏற்படுத்திய இடம், அமைதியாக இருந்தது. ட்ரெக்கிங்தான் போகவில்லை, அருகில் ஓரிடத்தில் சன்ரைஸ் பாருங்கள் என்றனர். கட்டஞ்சாயா குடித்துவிட்டு, சூரிய உதயம் பார்க்கப் போனோம். அடடா! மலைமுகடுகள் நீட்டிக்கொண்டிருக்க, மலைகளுக்கு இடையே மேகங்கள் தவழ்ந்துகொண்டிருக்க, லேசான சூரிய வெளிச்சம் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. இமைக்க மறந்து அப்படியே நின்றுவிட்டோம். சின்ன சின்ன மாற்றங்களுடன் இயற்கை வித்தை காட்டிக்கொண்டிருந்தது. ஆஃப் ரோடு பயணத்தையும் கூடார அனுபவத்தையும் தாண்டி, கொழுக்குமலையை நோக்கி வருவதற்கு இந்த ஒரு காட்சி போதும்! ட்ரெக்கிங் சென்று வந்தவர்களின் அனுபவமும் ஒளிப்படங்களும் ‘கடினமான மலையேற்றம் அற்புதமான காட்சிக்கு வழிவகுக்கும்!’ என்பதை மெய்ப்பித்தன.

திரும்பிய பக்கமெல்லாம் தேயிலைத் தோட்டங்களும் ஆங்காங்கே பூத்திருந்த மஞ்சள் நிற எவர் லாஸ்டிங் பூக்களும் போனஸ்! திரும்பி வரும்போது அதே ஆஃப் ரோடு பயணம் பயத்தைத் தரவில்லை. கொழுக்குமலையில் என்னவோ இருக்கிறது, இன்னொரு முறை செல்ல வேண்டும்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in