

பொழுதுபோக்காகச் செய்யக்கூடிய செயல்கள்கூடச் சில நேரம் நம்மைச் சாதனையாளராக மாற்றிவிடும் என்பதற்கு பனையூர் சுப்ரமணியன் சேஷாத்ரி சான்றாக இருக்கிறார். இதுவரை 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேல் தபால்தலைகளைச் சேகரித்திருக்கிறார்! 13 வயதிலிருந்து தபால்தலைகளைச் சேகரிக்க ஆரம்பித்து, 65 வயதில் ‘லிம்கா சாதனை’, ‘யூனிக் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்’ ஆகிய சாதனைகளில் இடம்பெற்றுவிட்டார்.
“டான் பாஸ்கோ பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது பள்ளி முதல்வர் மேஜையில் புதிய தபால்தலையைப் பார்த்தேன். என் ஆர்வத்தைக் கண்ட ஃபாதர் தாமஸ், ‘இது இத்தாலிய தபால்தலை. இதேபோலப் பல நாடுகளின் தபால்தலைகளையோ நம் நாட்டின் தபால்தலைகளையோ சேகரிக்கலாம். உனக்கு இதில் விருப்பமுள்ளதா?' என்று கேட்டு, அந்தத் தபால்தலையையும் கொடுத்துவிட்டார். அப்படித்தான் நான் தபால்தலைகளைச் சேகரிக்க ஆரம்பித்தேன்.
“படிப்பை முடித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கெலன், தன்னுடைய சேமிப்புக்காக இங்கு தபால்தலைகள் கிடைக்குமா என்று கேட்டார். என்னுடைய தபால்தலைகளைக் காட்டினேன். ‘நீங்கள் தபால்தலைகளைச் சேகரிக்கவில்லை, உருளைக்கிழங்குகளைச் சேகரிக்கிறீர்கள்’ என்றார். பிறகு ஒரு ஸ்டாக் புக்கைக் கொடுத்து, முறையாகத் தபால்தலைகளைச் சேகரிக்கச் சொன்னதோடு, அவர் சேகரிப்பிலிருந்த சில தபால்தலைகளை என்னிடம் கொடுத்தார். என்னிடமிருந்து சில தபால்தலைகளைப் பெற்றுக்கொண்டார். இதற்குப் பெயர்தான் ‘தபால்தலை பரிமாற்றம்’ என்றும் சொன்னார். தபால்தலைகள் சேமிப்பின் மூலம் வரலாற்றை அறிந்துகொள்வதோடு, கண்டம் தாண்டி நட்பையும் பெறலாம்” என்கிறார் சுப்ரமணியன்.
ஒருமுறை பள்ளி மாணவர்களிடம் தபால்தலை சேகரிப்பு குறித்துச் கூறிக்கொண்டிருந்தபோது, ஒரு மாணவர் ஏதாவது சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார். அதற்குப் பிறகுதான் நண்பர்களின் உதவியோடு ஒரே மாதிரியான 1,70,071 தபால்தலைகளைச் சேகரித்து, ‘லிம்கா சாதனை’ புத்தகத்தில் இவர் இடம்பெற்றார். பாகிஸ்தானிய நண்பர் மூலம் இந்தியர்களால் ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்காவின் ‘யூனிக் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்’ பற்றி அறிந்தார். 2017ஆம் ஆண்டு அந்த அமைப்பிலிருந்தும் சாதனைச் சான்றிதழைப் பெற்றுவிட்டார்.
- ஸ்ருதி பாலசுப்ரமணியன்,
பயிற்சி இதழாளர்