

நாம் வாழும் இந்த வாழ்க்கைக்கான அர்த்தம் குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எண்ணம் உண்டு. சிலருக்குத் தனக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் வாழ்வது மட்டுமே நிறைவு தராது. சமூகத்துக்கும் ஏதேனும் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கும். அவர்களைப் போன்றவர்களால்தாம் இந்தச் சமூகம் அடுத்த நிலைக்கு நகர்கிறது.
அப்படிப்பட்ட வித்தியாச மனிதர்களில் ஒருவர் அமலராஜன். பணி நெருக்கடியுள்ள மனியம்பட்டி அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்தாலும் விடுமுறை நாள்களில் ஒரிகாமி கலைஞராகக் கிராமம், நகரம் என்று தமிழ்நாடு முழுவதும் பயணித்துக்கொண்டிருக்கிறார்.
30 ஆண்டுகளாக ஒரிகாமி கலைஞராக வலம்வரும் அமலராஜன், 200க்கும் மேற்பட்ட ஒரிகாமி படைப்புகளைச் செய்யத் தெரிந்தவர். இவற்றில் இவரே உருவாக்கிய ஒரிகாமி உருவங்களும் உண்டு. மாணவர்கள், ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதோடு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இந்தக் கலையை எடுத்துச் செல்லும் விதத்தில் புதிய ஒரிகாமி கலைஞர்களையும் உருவாக்கிவருகிறார்.
“32 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய முகாம் ஒன்றில்தான் எனக்கு ஒரிகாமி அறிமுகமானது. ஒரு தாளை வெட்டாமல், ஒட்டாமல், மடிப்பதன் மூலமே ஒரு உருவத்தை உருவாக்க முடியும் என்பது என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. உடனே பலவித உருவங்கள் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால், அந்த முகாமில் மூன்று உருவங்களை மட்டுமே கற்றுக்கொள்ள நேரம் இருந்தது.
அதன்பின் நானே தேடித் தேடிக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அப்போதுதான் அரவிந்த் குப்தாவின் ஒரிகாமி புத்தகத்தை மொழிபெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. விரைவிலேயே ஒரிகாமி கலைஞராக மாறி, பலருக்கும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்துவிட்டேன்” என்று தனக்கு ஒரிகாமி அறிமுகமானதைச் சொல்கிறார் அமலராஜன்.
காகிதங்களை விதவிதமாக மடிப்பதன் மூலம் யானை, கொக்கு, நரி, தவளை, வண்ணத்துப்பூச்சி, கோப்பை, தொப்பி என்று செய்வதோடு சுவாரசியமான கதைகளையும் சேர்த்துச் சொல்வது அமலராஜனைத் தனித்துக் காட்டுகிறது.
“ஆரம்பத்தில் ஒரிகாமியை மட்டும் செய்துகாட்டிக்கொண்டிருந்தேன். பின்னர் எந்த உருவம் செய்கிறேனோ அந்த உருவத்துக்கு ஏற்ற கதையையும் அதோடு சொல்ல ஆரம்பித்தேன். அந்த வடிவம் எல்லாரையும் ஈர்த்தது. அதற்குப் பிறகு கணிதம், அறிவியல் போன்றவற்றையும் ஒரிகாமிக்குள் கொண்டுவந்துவிட்டேன். அதனால் இப்போது பள்ளிப் பாடத்திட்டத்துக்குள் ஒரிகாமியைக் கொண்டுவந்துவிட்டார்கள். இதை முக்கியமான மாற்றமாகப் பார்க்கிறேன்” என்கிறார்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறைந்தது மூன்று ஒரிகாமி கலைஞர்களை உருவாக்கியிருக்கிறார் அமலராஜன். ஓர் ஒரிகாமி கலைஞருக்கு ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது, நிதானம், அழகுணர்வு, பரந்த மனப்பான்மை, பொறுமை போன்றவையும் இருக்க வேண்டும் என்கிறார்.
எல்லாருக்கும் ஏதோ ஒன்றைக் கற்றுக்கொடுத்த பெருந்தொற்றுக் காலம்தான் இவரையும் யூடியூப், இணையம் போன்றவற்றுக்குள் அழைத்துச் சென்றது. தமிழ்நாடு முழுவதும் வீட்டுக்குள் அடைபட்டிருந்த குழந்தைகள் அமலராஜனின் ஒரிகாமி வகுப்புகளில் கலந்துகொண்டு, மகிழ்ச்சியாக இருந்தார்கள். விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் இருந்து கொண்டு குழந்தைகளைச் சந்தித்ததும் அவர்களுக்கு ஒரிகாமி கற்றுக்கொடுத்ததும் நிறைவாக இருந்தது என்கிறார் இவர்.
இவற்றை எல்லாம் பார்த்து, ஆசிரியர் பயிற்சிக் கல்வி நிறுவனம் சேலத்தில் உள்ள பள்ளிகளில் உணவு இடைவேளையின்போது ஒரிகாமி கற்றுக்கொடுக்கச் சொல்லியிருக்கிறது. கல்வித் தொலைக்காட்சியும் ஒரிகாமி நிகழ்ச்சிகளை வழங்குவதாகச் சொல்லியிருக்கிறது.
பள்ளி, கல்லூரிகளில் மட்டுமின்றி தற்போது புத்தகத் திருவிழாக்களிலும் ஒரிகாமி பயிற்சி கொடுக்கச் சொல்கிறார்கள். ராமநாத புரத்திலும் திருப்பூரிலும் ஒரே நேரத்தில் 200 குழந்தைகளுக்குப் பயிற்சியளித்தது தனக்கே ஆச்சரியமாக இருந்தது என்கிறார் அமலராஜன்.
ஜப்பானிய கலையான ஒரிகாமி, தமிழ்நாட்டில் இவ்வளவு வரவேற்பைப் பெறுவதற்குக் காரணம் எளிமைதான். குப்பை என்று தூக்கி எறியும் காகிதங்களில் இருந்து அற்புதமான ஒரிகாமி உருவங்களை உருவாக்கி விடலாம். பெரிய செலவு இல்லை. எந்த நேரத்திலும் எங்கும் செய்யலாம். ஒருமுறை செய்து பார்த்துவிட்டால், அந்த உருவம் நினைவைவிட்டு அகலாது. கசங்காத தாள், சமதளமான தரை, சரியான கோணத்தில் மடிப்பு ஆகியவைதான் நேர்த்தியான ஒரிகாமி உருவங்களைக் கொண்டுவரும் மந்திரம்!
“நாளிதழ்களின் இரண்டு தாள்களை வைத்துக்கொண்டு விதவிதமான தொப்பிகளைச் செய்து காட்டிக்கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு சிறுவன் அதே தொப்பியை இன்னும் வேறு விதமாக மடித்துக் காட்டினான். அசந்து போனேன். இப்படிக் குழந்தைகளிடமிருந்து நான் கற்றுக்கொள்ளவும் செய்கிறேன். கற்றல் என்பது வாழ்நாள் அனுபவம். ஒரிகாமியை வைத்து வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் கதை சொல்லியாக மாறினேன்.
ஒருகட்டத்தில் ஒரிகாமி மூலம் வட்டம், சதுரம், முக்கோணம் என்று வடிவக் கணிதத்தைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். அதற்குப் பிறகு காகிதத்தில் கோப்பை செய்து, அதில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்துக் காட்டி, அறிவியலையும் சுவாரசியமாகச் சொல்லிக் கொடுக்கிறேன். இப்படிக் கற்றலும் கற்பித்தலுமாக இருப்பதால் என் வாழ்க்கை மிகவும் சுவாரசியமாகவும் வண்ணமயமாகவும் இருக்கிறது. ஒவ்வொரு அனுபவமும் வாழ்தல் இனிது என்பதை உணரவைத்துக் கொண்டிருக்கிறது!’’ என்கிறார் அமலராஜன்.