

பொறியாளராக இருந்த கிரேஸி மோகன் முழுநேர நகைச்சுவை எழுத்தாளராக, நாடகக் கலைஞராக மாற தெருநாய்களும் முக்கியக் காரணம் என்றால் நம்புவீர்களா? ராவுகளில் வீடு திரும்பும்போது அடையாள அட்டை கேட்காத குறையாகத் தெருநாய்கள் விரட்டி விரட்டி நடத்திய விசாரணைகளால் கிலேசமடைந்து வேலையைவிட்டு முழுநேரமாக எழுத்துப் பணியில் இறங்கியதாக அவரே குறிப்பிட்டிருக்கிறார்.
இரவு நேரம் வீடு திரும்பும் வகையிலான வேலைகளில் இருப்பவர்கள், எந்நேரமும் எரிந்துவிழும் மேலாளரைச் சமாளிப்பதை விடவும், இருட்டில் பைக்கில் செல்லும்போது எந்த மூலையிலிருந்து பைரவர்கள் வந்து பார்க்கிங் (barking) பண்ணுவார்களோ என்று எண்ணியே பதறுவார்கள். பேயை நம்பாத முற்போக்காளர்கள்கூட நாய் என்றால் நடுங்கத்தானே செய்வார்கள்!
அவ்வப்போது திரைப்படங்களில் நடிக்கவும் செய்யும் அஜித் குமாருடன் இமயமலையிலேயே பைக் சவாரி செய்தவராக இருந்தாலும், தெருமுனை நாய்களைக் கண்டால் கியர் தெறிக்கக் கிலியடைந்து பறப்பது இயல்பு. நாய்த் தொல்லையைச் சமாளிக்கவே, நகைகளை அடகுவைத்து கார் வாங்கிய நடுத்தர வர்க்கத்தினர் உண்டு.
எனக்கு அந்த அளவுக்கு வசதி இல்லை என்பதால், இரவு நேரங்களில் ‘பங்கு ஆட்டோ’வை விட்டு இறங்கியதும், நாய்க்குப் பயந்து பக்கத்துத் தெருவுக்குச் செல்ல ஆட்டோ பிடித்த அனுபவங்கள்தாம் நிறைய. “ண்ணா… இவ்ளோ பக்கமா இருக்கிற தெருவு… நடந்தே போய்டலாமே?” என்று ஏரியா ஆட்டோக்காரர்கள் ஓரிரு முறை கேட்டது உண்டு. அதன் பின்னர் நள்ளிரவு நேரம் நான் வந்தாலும் ஆங்கொரு ஆட்டோ எனக்கெனத் தயாராக இருக்கும். அவர்களுக்குள்ளேயே பேசிவைத்துக் கொண்டிருப்பார்கள் போலும்!
ஏரியா ஆட்டோ கிடைக்காத இரவொன்றில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தன்னந்தனியனாக நடந்துசென்றேன். அந்நேரம் பார்த்து ஆபத்பாந்தவராக ஒரு முதியவர் என்னுடன் நடந்து வந்தார். ‘துணிச்சலில்லாதவனுக்குத் துணையாகச் சாமியே வரும்’ என்பார்கள். அன்னாரை எண்ணி இறும்பூதிக்கொண்டே நடந்து சென்ற நான், சடக்கென ஒரு வீட்டுக்குள் அந்த மனிதர் நுழைந்துவிட்டதைப் பார்த்ததும் ஆடிப்போய்விட்டேன். அதுதான் அவர் வீடுபோலும். அதற்கு நான்கைந்து வீடுகள் தள்ளித்தான் அந்நாயின் ஜாகை.
‘எக்சார்சிஸ்ட்’ படத்தைப் பார்த்துவிட்டு இருட்டில் நுழைந்தவன் கணக்காகத் திகைத்து நின்றேன். நமக்கு ஆபத்து என்னும்போது ஆள் நடமாட்டமே இருக்காது என்னும் உண்மையை உணர்ந்ததும், திரும்பி பிரதான சாலைக்கே நடந்தேன். அங்கு ஆட்டோக்காரர்களும் உறங்கச் சென்றுவிட்டதால், காலறு(!) நிலையில் தவித்துக்கொண்டிருந்தேன்.
பின்னர், ‘ஒரு தெருநாய் நம் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதா… வெட்கம்!’ என்று எனக்கு நானே தைரியம் சொல்லிக்கொண்டு மீண்டும் சந்துக்குள் நுழைந்தேன். எனினும், நாய் வீட்டுக்குச் சில வீடுகள் முன்பே, காலடி எடுத்துவைக்க கால்கள் மறுத்தன.
நின்று யோசித்துக்கொண்டிருக்கும் போது, “யார்ப்பா நீ? வர்ற… நிக்கிற. திரும்பிப் போற… இன்னா விஷ்யம்?” என்றொரு குரல் கேட்டது. ஏறிட்டுப் பார்த்தால், ஒரு வீட்டின் பால்கனியில் மூர்க்க முகத்துடன் நின்றிருந்தார் ஒரு மூதாட்டி.
இவ்வளவு நேரமும் வேடிக்கைப் பொருளாகக் காட்சியளித்த வேதனையை மறைத்துக்கொண்டு அந்த நாய் எனக்கு ஏற்படுத்தியிருந்த ‘உயிராபத்து’ குறித்து, சாரு நிவேதிதா பாணியில் அந்த மூதாட்டியிடம் முறையிட்டேன். “அட, இதானா விஷயம்? ந்தா… ச்சீ ஆர்னால்டு, அப்பால போ” என்று குரல் கொடுத்தார். நாய் ஒருமுறை ஏறிட்டுப் பார்த்துக்கொண்டே என்னைத் தாண்டி ஓடிப்போனது.
இப்படி நிறைய அனுபவங்கள் பலருக்கு இருக்கலாம். அதுவும் கரோனா காலத்தில் ‘மாஸ்க்’ மறைத்த முகங்களால் அடையாளம் தெரியாமல் ஏரியா நாய்களே வெகுண்டெழுந்து விரட்ட, ‘நான்தான் அண்ணன்’ என்று ‘முறைமாமன்’ கவுண்டமணி பாணியில் தன்னிலை விளக்கம் சொல்லித் தப்பித்த கதைகளைப் பட்டியலிடச் சொன்னால், பலரும் பல பாகங்களுக்குப் புத்தகமே எழுதிவிடுவார்கள்!