திண்ணைப் பேச்சு 03: பொம்மைகளோடு விளையாடட்டும் கடவுள்

திண்ணைப் பேச்சு 03: பொம்மைகளோடு விளையாடட்டும் கடவுள்
Updated on
2 min read

ஞானி ஒருவர் தனக்கு வாய்த்த பதி னாறு குருநாதர்களாகச் சிலந்தி, சலவைத் தொழிலாளி, வண்டி ஓட்டுபவர் என்று வரிசைப்படுத்தும் பட்டியலில் ஒரு குழந்தையும் இடம்பெற்றிருக்கும்.

பெரும்பாலான பெற்றோர் தமது குழந்தைகள் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்பது கிடையாது. அப்படிக் கேட்டிருந்தால் அவர்களுக்கும் குழந்தையே குருநாதராகக் கிடைத்திருப்பார். எனக்குப் பல குழந்தைகள் குருநாதர்களாகக் கிடைத்திருக்கிறார்கள்.

உனக்காக அழு: ஒருமுறை என் பேரனை மருத்துவ மனையில் சேர்த்திருந்தார்கள். அல்லும் பகலும் அவனைப் பற்றிய கவலையே என்னை வாட்டியது. இதை யாரோ அவனிடம் சொல்லியிருக்கிறார்கள்.

அவன் என்னிடம், “தாத்தா, என்னைப் பற்றி நீ கவலைப்படுகிறாயாமே, நீ எனக்காகக் கவலைப்படாதே. உனக்காகக் கவலைப்படு” என்று சொன்னபோது திகைத்துப்போனேன்.

மிகப்பெரிய வேதாந்த பரமான சொற்களை எவ்வளவு எளிதாக உச்சரித்துவிட்டான். ஏசு பெருமானைச் சிலுவையில் அறைய இழுத்துச் சென்றார்கள். அதைப் பார்த்து வழியில் நின்ற பெண்கள் அழுதார்கள். அவர்களைப் பார்த்து ஏசு, “எருசலேம் குமாரத்திகளே! நீங்கள் எனக்காக அழாதீர்கள். உங்களுக்காக அழுங்கள்” என்று கூறிவிட்டுச் சென்றார். என் பேரன் சொன்னதற்கும் ஏசுபிரான் சொன்னதற்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை.

விளையாடட்டும் கடவுள்: ஒருநாள் பூஜை அறையில் பாடிக் கொண்டிருந்தேன். எங்கள் வீட்டுக் குழந்தை பொம்மைகளை வைத்திருக்கும் கூடையைக் கொண்டுவந்து என் முன்னால் கொட்டிக் கவிழ்த்துவிட்டது. நான் பாடுவதை நிறுத்திவிட்டு, அவனை முறைத்தேன்.

“பாடியது போதும் தாத்தா, சாமி கொஞ்ச நேரம் பொம்மைகளோட விளையாடட்டும்” என்றான்!

என் குருநாதராக அவனை வணங்கினேன்.

அம்மா எங்கே? - குழந்தையை என் பொறுப்பில் விட்டுவிட்டு வெளியே சென்ற என் மனைவி வெகுநேரமாக வீடு திரும்பவில்லை.

‘அம்மா எங்கே? அம்மா எங்கே?’ என்று கேட்டுக் குழந்தை அழ ஆரம்பித்துவிட்டது. புதிதாக வாங்கிய பொம்மை ஒன்றைக் கொடுத்தேன். அழுகை நின்றது. குழந்தை பொம்மையை வெறித்துப் பார்த்தது. மறுபடி அழுகை.

“ஏன் என்னாச்சு?” என்றேன்.

“இதோட அம்மா எங்கே?”

கை இல்லாத பொம்மை: குழந்தைகள் தங்களிடமுள்ள உடைந்த பொம்மைகளைக்கூட எறிந்துவிடுவதில்லை. ஒருமுறை பழைய பொம்மைகள் சிலவற்றை நான் குப்பையில் போட்டுவிட்டேன். சிறிது நேரத்தில் கையில்லாத குழந்தை பொம்மை எங்கே என்று கேட்டது குழந்தை.

“அதுக்குக் கை இல்லை, குப்பையில போட்டுட்டேன்.”

“ஐயோ, ஒரு கையை வச்சுக்கிட்டு என்ன பண்ணும்? என்கிட்டே இருந்தா நான் ஊட்டிவிடுவேனே!” என்றது குழந்தை.

கலங்கிவிட்டேன்.

குருவியின் பாட்டு: நானும் குழந்தையும் ‘வாக்கிங்’ போனோம். வழியில் இலைகள் உதிர்ந்த பட்டுப்போன மரத்தில் ஒரு குருவி பாடிக்கொண்டி ருந்தது. பக்கத்தில் பச்சைப் பசேல் என்று ஒரு மரம் இருந்தது.

“பச்சை மரத்தில் உட்கார்ந்து பாடலாம் இல்லே?” என்றேன் குழந்தையிடம்.

“ஐயோ, இந்த மரத்துக்கு இலை களை வரச் சொல்லிக் கூப்பிடுது, அந்தக் குருவி!” என்றது குழந்தை

குழந்தை வரைந்த மழை: எங்கள் வீட்டுக் குழந்தை என்னை வரைந்து காண்பித்தது. கண்ணாடி, வயிறுக்குப் பதிலாக ஒரு பெரிய வட்டம். குச்சிக்கால்கள்.

புகழ்பெற்ற மேலைநாட்டு ஓவியர் வான்கா சொல்வார், “ஓவியம் என்பது தத்ரூபமல்ல. ரூபமே இல்லாத நிஜத்துக்குள் நம்மை ஒரு மாய வழியில் இட்டுச் செல்வது.”

அப்படித்தான் ஒருமுறை குழந்தையிடம், “எங்கே மழையை வரைந்து காட்டுப் பார்க்கலாம்” என்றேன்.

ஒரு வீட்டை வரைந்தது. மழை எங்கே என்று கேட்டேன்.

“நாம வீட்டுக்குள் இருக்கோம். மழை வெளியே பெய்யுது” என்றது குழந்தை.

வான்கா சொன்னது சரிதான்!

சாமி நல்லா இரு! - பூஜை அறையில் எல்லாரும் ஏதோ பிரார்த்தனையை முணுமுணுத்தபடி நின்றனர். என் பேரனும் ஏதோ முணுமுணுத்தான்.

“என்ன சொன்னாய் சாமியிடம்?” என்று கேட்டேன்.

“சாமி நல்லா இருன்னு சொன்னேன்” என்றான்.

“அதிகப்பிரசங்கி” என்றார் அவன் அம்மா.

“அவன் சொன்னது சரிதான். இதுவும் ஒரு போற்றித் திரு அகவல்தான்!” என்றேன்.

கிருஷ்ணனின் கால்! - எங்கள் வீட்டில் ஓர் அழகான கிருஷ்ணன் பொம்மை இருந்தது. தத்ரூபமான நீல நிறத்தில் பட்டுக் கன்னங்களுடன் பளிச்சென்று பார்த்தாலே பரவசப்படுத்தும் சின்னஞ்சிறு கிருஷ்ணன் பொம்மை.

ஒருநாள் கிருஷ்ணன் பொம்மைக்குப் போதாத வேளை. என் பேரன் அதை எடுக்க முயன்றபோது பொம்மை கீழே விழுந்துவிட்டது. கிருஷ்ணனின் ஒய்யாரமான கால் உடைந்துவிட்டது.

“என்ன காரியம் பண்ணிட்டே?” என்றேன்.

உடனே ஒரு கையில் மருந்து சீசா, மற்றொரு கையில் பாண்டேஜ் துணியுடன் வந்தவன், “கிருஷ்ணனுக்கு மருந்து போட்டு, கட்டிவிட்டால் சரியாகிவிடும்” என்றான்.

நான் குழந்தையை வாரி அணைத்தேன்.

உங்கள் வீட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் ஒரு குட்டி ஞானி. அவர்கள் சொல் வதைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்களைத் தலையில் குட்டி வளர்க்காதீர்கள். அவர்கள் உங்கள் குருநாதர்களாகக்கூட ஆகலாம்!.

(பேச்சு தொடரும்)

- thanjavurkavirayar@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in