

சென்னையை ஒட்டியுள்ள புறநகர்ப் பகுதியில் எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு பெரிய குப்பைமேடு இருக்கிறது. ஒவ்வொரு தெருவிலும் மனிதர்கள் வீசி எறிந்த கழிவும் குப்பையும் அவர்கள் வாழ்கிற வாழ்க்கையின் லட்சணம் போலேவே குவிந்தும் சிதறியும் கிடக்கின்றன.
‘தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்படும்’ என்கிற திருக்குறளுக்கு இப்படியும் பொருள் சொல்லலாம் போலும்.
அசைந்த குப்பை! - ஒருநாள் மொட்டை மாடியில் நின்றபடி நான் அந்தக் குப்பை மேட்டை பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஓர் அசைவு தெரிந்தது. உற்றுப் பார்த்தேன். குள்ளமான மனித உருவம். அது மட்டும் அசையாமல் இருந்திருந்தால் அங்கு ஒரு மனிதர் நிற்பதே தெரிந்திருக்காது. தோளில் ஒரு சாக்குப்பை, அது அந்த முதியவரை விடவும் பெரிதாக இருந்தது. குனிந்து பொறுக்கி அந்தப் பைக்குள் போட்டுக்கொண்டிருந்தார்.
பல வருடங்களுக்கு முன் டாக்டர் மொபஸ்கருடன் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. மொபஸ்கர் ஒரு மருத்துவர் என்கிற போதிலும் தன்னை Sanitation Engineer என்றே அழைத்துக்கொள்வார். மகாராஷ்டிர மாநிலத்தில் துப்புரவுத் திட்டங்களுக்கு ஆலோசகராக இருந்தார். அவரது பணியைப் பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்ம விருது வழங்கிக் கெளரவித்தது. இப்போது அவர் உயிருடன் இல்லை. ஆனால், அவர் சொன்ன ஒரு வாக்கியத்தை என்னால் மறக்க முடியவில்லை.
‘குப்பை என்று ஒன்று இல்லவே இல்லை!’ (There is no such thing as waste).
பல ஆண்டுகளுக்கு முன் நான் படித்த கவிதை,
‘குப்பை பொறுக்குபவன்
பார்வையின் துணையுடன்
உன் வாழ்வெனும்
கோணிப்பையை நிரப்புவாயாக!
எல்லாம் சிறந்ததே!
எல்லாம் உயர்ந்ததே!’
குப்பையைக் கண்டுபிடித்தால் ஆயிரம் ரூபாய் பரிசு! - மகாத்மா காந்தியின் காரியதரிசியாகப் பணிபுரிந்து நூறாண்டு வாழ்ந்த கல்யாணம், சென்னை தேனாம்பேட்டையில்தான் வசித்தார். அவர் வீட்டு வாசல் கதவில் ஒரு விசித்திர வாசகம் எழுதப்பட்டிருக்கும்.
‘இந்த அடுக்குமாடி வளாகத்தில் எந்த இடத்தி லாவது குப்பையைக் கண்டுபிடிப்பவருக்கும், என் வீட்டில் எங்கேனும் தூசியைக் கண்டுபிடிப்பவருக்கும் ரூபாய் 1000/-பரிசு.’
சென்னையின் போக்குவரத்து மிகுந்த அந்தச் சாலை, சிக்னல் பகுதியில் இருந்து அவர் குடியிருக்கும் சாலையின் இறுதிவரை ஏறத்தாழ இரண்டு கிலோ மீட்டர். அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்துவிடுவார். இதை அவர் உடல் நலம் குன்றி படுக்கையில் விழும்வரை செய்துகொண்டிருந்தார். சுத்தம்... சுத்தம்... இதுதான் அவர் தாரக மந்திரம்!
சென்னையில் உள்ள குப்பைக் கழிவுகளை அப்புறப்படுத்தவும் அதன் மூலம் அரசுக்கு வருமானம் வரவும் பல திட்டங்களை அவர் அரசுக்குச் சொன்னார்.
“சென்னை மாநகராட்சியின் குப்பை ஒழிக்கும் பணியை ஒரு மாதம் என்னிடம் ஒப்படையுங்கள். அரசுக்கு மாதம் 70 கோடி வருமானம் வர நான் உத்தரவாதம் தருகிறேன்” என்றார்.
அரைக்கால் சட்டை யும் துடைப்பமுமாக அதி காலையில் மாநகராட்சி சாலையை அவர் சுத்தம் செய்யும் செய்தி பம்பாயிலிருக்கும் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எட்டியது.
“நாங்கள் கேமராமேன், படப்பிடிப்பு உபகரணங்களுடன் வந்து உங்கள் பணியைப் படம்பிடிக்க விரும்புகிறோம். நாங்கள் வந்துசேர பிற்பகல் மூன்று மணி ஆகிவிடும். நீங்கள் துடைப்பத்துடன் தெருவில் பெருக்குவதுபோல் ஒரு படம் எடுக்க வேண்டும்” என்றதற்கு, “உங்களுக்கு நான் அப்படி போஸ் கொடுக்க முடியாது. நான் பெருக்கும்போது வந்து படம் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டார்.
அவர் வீட்டுக்குப் போகும்போதெல்லாம் எப்படியாவது குப்பை, தூசியைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்று சன்னல் கம்பிகள், மேசைகள், நாற்காலிகளில் கைவைத்துத் பார்ப்பேன். தூசி துளிகூட இருக்காது.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் இவர் வீட்டுக்கு வருகை தந்தபோது, இங்கே துப்புரவு பணியாளர்கள் நான்கு பேர் இருப்பார்களா என்று கேட்டார்.
“நான் ஒருவர்தான்” என்று பதில் அளித்தார் கல்யாணம்.
நான்தான் அந்தப் பையன்! - நான் மொட்டை மாடியிலிருந்து கீழிறங்கி வந்தேன். என் முன்னால் கூன்போட்ட முதுகில் குப்பை கோணியைச் சுமந்து கொண்டு போனார் அந்த முதியவர்.
குப்பை பொறுக்குவதில் ஜீவித்துவிட முடி யுமா? ஒரு நாளைக்கு எவ்வளவு கிடைக்கும்? என்ன சாப்பிடுகிறார்? எங்கே தூங்குவார்? இப்படி அவரிடம் கேட்பதற்கு என்னிடம் கேள்விகள் இருந்தன.
“ஐயா, குப்பையைக் கொண்டுபோய் என்ன செய்வீங்க?”
“குடுத்தா காசு கிட்டும்.”
“எவ்வளவு கிடைச்சுடப் போகுது?”
“சாப்பாட்டுக்குப் போக மிச்சமும் இருக்கும் சாமி. அதைச் சேர்த்து வைப்பேன்.”
“ரொம்ப வருஷங்களுக்கு முன்னால் ஒரு பையன் இங்கே குப்பை பொறுக்க வருவான். இப்ப அவனைக் காணோம்.”
“அது நான்தான். உங்க வீட்டு கிரகப் பிரவேசக் குப்பை எல்லாம் எடுத்தேன். ஞாபகம் இருக்கா?”
“அடையாளமே தெரியலியே...”
“வயசாயிடுச்சு... ஒருக்கா தண்ணி லாரில அடிபட்டு சாகக் கிடந்தேன்... அதான் இப்படி ஆயிட்டேன்!”
“அடப்பாவமே...”
“ஐயா, குப்பை பொறுக்குன காசுல ஊரு கடசீல இருக்கு பாருங்க பெரிய குப்பைமேடு, அது பக்கத்துல குடிசை போட்டுக்கிட்டேன். கல்யாணம் பண்ணி ரெண்டு பொண்ணுங்க. கட்டிக் குடுத்தேன். என் சம்சாரம் போன வருசம் செத்துப் பூட்சுங்க.”
“குப்பை பொறுக்கறத எப்படிப்பா சகிச்சுக்குற?”
“ஐயோ அதை ஏன் கேக்கறீங்க, செத்துப்போன பூனைக்குட்டிங்க... ஒடஞ்ச பொம்மைங்க, கொழந்தைங்க நடைவண்டி எல்லாம் கொண்டுவந்து வீசிருப்பாங்க. எனக்கு இதப் பாத்தா அழுகையே வந்துவிடும்.”
ஒரு விஷயம் புலப்பட்டது, ‘நாம் வசீகரமாக, உபயோகமாக இருக்கிறவரைக்கும்தான் இந்தச் சமூகமும் குடும்பமும் நம்மை வைத்துக்கொள்ளும். இல்லாவிட்டால் இந்தச் செத்துப்போன பூனைக்குட்டிகளைப் போல நம்மையும் குப்பையில் எறிந்துவிடும்.’
மனசெல்லாம் குப்பை... பாரதி தமது பாடலில் புதுவையில் குப்பையையும் கந்தலையும் மூட்டை கட்டிக்கொண்டு திரிந்த குள்ளச்சாமியிடம், ‘இப்படி அழுக்கு மூட்டை சுமந்திடுவது ஏனோ’ என்று வினவுகிறார். அதற்கு குள்ளச்சாமி, ‘புறத்தே நான் சுமக்கின்றேன். அகத்தினுள்ளே இன்னதொரு பழங்குப்பை சுமக்கின்றாய் நீ’ என்று பதிலளிப்பார்.
அண்மையில் சுவிட்சர்லாந்திலிருந்து கருப்பசாமி பற்றிய ஆய்வின் நிமித்தம் தமிழகம் வந்திருந்த எவ்லின் மாசிலாமணி மேயர் என்கிற பெண்மணி என்னைச் சந்தித்தார். 37 வருடங்களுக்கு முன் தஞ்சையில் என்னைச் சந்தித்திருக்கிறார்.
“என்ன மாற்றத்தைத் தமிழ்நாட்டில் பார்க்கிறீர்கள்?”
“ரொம்ப குப்பை, அப்புறம் எப்படி டூரிஸ்ட் வருவாங்க? கவர்மென்ட் பெரிய திட்டம் போடணும். மனம் மாறணும்… எல்லாத்தையும் கவர்மென்ட் பார்த்துக்கும்னு நினைக்கிறீங்க... அது முடியாது.”
“உங்க ஊர்ல கவர்மென்ட்தானே செய்யுது?”
“ஓ... நோ... எங்க ஊர் பத்திப் பேச வேணாம். அங்கே ஊர்தான் சுத்தம்… மனசு குப்பை. இங்கே அப்படி இல்ல. ஊர்தான் குப்பை, ஜனங்க நல்லவங்க... அதுவும் தமிழர்கள் ரொம்ப நல்லவங்க. இனிமையானவங்க.”
இரண்டு கிண்ணங்களில் குலாப் ஜாமுன் வந்தது. எவ்லின் பேச்சு அதைவிட இனித்தது!
(பேச்சு தொடரும்)
- thanjavurkavirayar@gmail.com