

மகாராஷ்டிரத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. இதில் புனேவில் வசிக்கும் தாயும் மகனும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 43 வயது தாய் மோனிகா கணேஷ் 51.8% மதிப்பெண்களையும் மகன் மந்தன் கணேஷ் 64% மதிப்பெண்களையும் பெற்றிருக்கிறார்கள்.
மோனிகா குப்பை சேகரிக்கும் பணியை மேற்கொண்டுவருகிறார். ஒற்றைப் பெற்றோரான மோனிகா, படித்தால் வேறு நல்ல வேலைக்குச் செல்லலாம் என்பதால் படிப்பதில் ஆர்வம் காட்டினார். பத்தாம் வகுப்புப் படித்த தன் மகனின் வாட்ஸ் அப் குழுவில் வரும் தேர்வு தொடர்பான அத்தனை விஷயங்களையும் தானும் படித்தார். அம்மா படிப்பதற்கு மகன் முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்.
“நான் ஒற்றைப் பெற்றோராக வாழ்க்கையை நடத்துகிறேன். படிப்பு இருந்தால் இன்னும் நல்ல வேலைக்குப் போகலாம் என்பதால் படிக்கிறேன் என்று சொன்னேன். என் மகனும் என்னுடன் பணி புரிபவர்களும் என்னை உற்சாகப்படுத்தினார்கள். தேர்வு எழுதினாலும் தேர்ச்சி பெறுவேனா என்று சந்தேகமாகவே இருந்தது. ஆனால், என் மதிப்பெண்களைக் கண்டதும் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
என் மகனின் பங்களிப்பு இதில் முக்கியமாக இருந்தது. அவனும் படித்துக்கொண்டு, எனக்கும் பயிற்சியளித்தான். சோர்ந்து போகும் நேரத்தில் ஊக்கம் அளித்தான். படிப்பதற்கு வயது ஒரு தடையே இல்லை என்று இப்போது பலரிடமும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். செவிலியாக வேண்டும் என்பது என் விருப்பம். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்விலும் வெற்றி பெற்று, செவிலியர் படிப்பில் சேருவேன்” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் மோனிகா.