யூடியூப் உலா: கனவு வாழ்க்கை!

யூடியூப் உலா: கனவு வாழ்க்கை!
Updated on
2 min read

இருபது ஆண்டுகளுக்கு முன்பு அம்மியில் சட்னி அரைப்பதும் ஆட்டுக்கல்லில் மாவு அரைப்பதும் விறகு அடுப்பில் சமைப்பதும் இயல்பான விஷயங்களாக இருந்தன. இன்றும் கிராமங்களில் இவற்றைப் பயன்படுத்துபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால், நகரங்களில் மிக்ஸி, கிரைண்டர், கேஸ் அடுப்பு என்று வீட்டு வேலைகளை எளிதாக்கும் விஷயங்கள் பெரும்பாலும் வந்துவிட்டன. அதனால், இன்று விறகு அடுப்பில் சமைப்பதும் அம்மியில் அரைப்பதும் அதிசயமான செயல்களாக மாறிவிட்டன என்பதற்கு ‘தி டிரெடிஷனல் லைஃப்’ யூடியூப் அலைவரிசையின் வெற்றியே சாட்சி!

ஒரு கிராமத்து வாழ்க்கைக்கு உரிய விவசாயம், ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, சமையல், உடை என எல்லாவற்றையும் சேர்த்து வழங்குகிறது இந்த யூடியூப் அலைவரிசை. ராம், வளர் என்கிற இளம் தம்பதி தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் தங்கள் வாழ்க்கையை வீடியோக்களாக வெளியிட்டுவருகிறார்கள்.

அழகான கிராமம். தோட்டத்துடன் கூடிய கூரை வேய்ந்த வீடு. மண், பித்தளை பாத்திரங்களில் சமையல். விறகு அடுப்பு. அருகிலேயே காய்கறித் தோட்டம், நெல் வயல். கேமரா வழியே பார்க்கும்போது அவ்வளவு அழகாக இருக்கிறது அந்தக் கிராமம்.

ராம் வயலை உழுகிறார். களை பறிக்கிறார். தண்ணீர் பாய்ச்சுகிறார். மாடுகளுக்குத் தீனி போடுகிறார். வளர் தோட்டத்திலிருந்து காய்கறிகளையும் கீரைகளையும் பறிக்கிறார். குக்கர் இல்லாமல் விறகடுப்பில் சமைக்கிறார். மோரைக் கடைந்து வெண்ணெய் எடுக்கிறார். தோட்டத்துப் பூக்களைத் தொடுத்துச் சூடிக்கொள்கிறார்.

எளிய பருத்தி சேலை அணிகிறார். சமையல் முடிந்ததும் வயலில் வேலை செய்யும் ராமை அழைக்கிறார். இருவரும் சேர்ந்து சாப்பிடுகிறார்கள். ராம் வளருக்கு அன்பாக மருதாணி வைத்துவிடுகிறார். வீட்டு வேலைகளையும் பகிர்ந்துகொள்கிறார். வளர் ஊருக்குச் சென்றிருக்கும்போது தானே சமைத்துக்கொள்கிறார். வீட்டுக்கு வரும் உறவினர் களை உபசரிக்கிறார். அவ்வப்போது தங்கள் மகனின் குறும்புகளையும் காட்டுவது சிறப்பு.

கிராம வாழ்க்கையை அறியாதவர்கள் கனவு காணக்கூடிய ஒரு வாழ்க்கையை ராமும் வளரும் வாழ்ந்துகாட்டு கிறார்கள். அதிகம் பேச மாட்டார்கள். அவசியமான இடங்களில் சப்டைட்டில் போடுகிறார்கள். ஒளி, ஒலிப்பதிவு, இசை, எடிட்டிங் என அனைத்தும் மிக நேர்த்தியாக இருப்பதால், மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகின்றன இந்தக் காணொளிகள்.

2021 டிசம்பரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அலைவரிசையில் இதுவரை 27 காணொளிகள் மட்டுமே வெளியிடப்பட்டிருந்தாலும் 12 லட்சம் சந்தாதாரர்களைப் பெற்றிருக்கிறது. காணொளி கள் 6 முதல் 14 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றிருக்கின்றன. ஆயிரக்கணக்கில் மறுமொழிகள் குவிந்துள்ளன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in