கலை: உழைப்பின் வண்ணங்கள்

கலை: உழைப்பின் வண்ணங்கள்
Updated on
2 min read

கலைக்கு எல்லையும் சட்டகமும் இல்லை என்கிறபோதும் மக்களின் வாழ்க்கையையும் சமகால அரசியலையும் பிரதிபலிக்கும் படைப்புகளே என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உழைப்பாளர்களின் பெருமையை அங்கீகரிக்கும் விதமாக மே 27, 28 ஆகிய தேதிகளில் சென்னை கேரள சமாஜம் வளாகத்தில் ஓவியக் கண்காட்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக் குழு ஒருங்கிணைத்திருந்தது.

‘உழைப்போரெல்லாம் தலை’ என்கிற தலைப்பில் நடைபெற்ற இந்த ஓவியக் காட்சியில் முப்பது வயதுக்கு உள்பட்ட இளம் ஓவியர்களின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஓவியங்களோடு வைக்கப்பட்டிருந்த சிறு குறிப்புகள் சுவாரசியமாக இருந்தன.

சசிதர்
சசிதர்

எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு என்கிற அடிப்படை உரிமையிலிருந்து விலகி ஓய்வு என்பதே உழைப்புக்கு எதிரானது என்கிற கருத்துத் திணிப்பைச் சில ஓவியங்கள் சுட்டிக்காட்டின. வெவ்வேறு வண்ணங்களில் வரையப்பட்டிருந்த ஓவியங்கள் அனைத்தும் உழைப்புச் சுரண்டல், உணர்வுச் சுரண்டல், உழைப்பின் மேன்மை போன்றவற்றைப் பிரதிபலித்து ஒற்றைக் கருத்தில் மையம் கொண்டன.

பல் மருத்துவ மாணவரான சசிதருக்கு ஓவியங்கள் மீது ஆர்வம். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வரைந்துவரும் இவர் ஓவியக் காட்சிகளையும் பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார். இந்தக் கண்காட்சிக்காக ஓய்வு குறித்து வரைந்திருக்கும் இவர், “ஓய்வாக இருப்பது நல்லதல்ல என்று நமக்குச் சிறு வயதிலேயே போதிக்கப்படுகிறது. முதலாளித்துவத்தின் வெற்றியும் அதுதான்.

ஹர்ஷனா முரளி
ஹர்ஷனா முரளி

ஒருவர் ஓய்வின்றி உழைத்துக்கொண்டே இருந்தால் முதலாளித்துவத்துக்கு லாபம்தானே. ஓய்வெடுப்பதே ஏதோ குற்றச் செயல்போல் நம்ப வைக்கப்பட்டு விட்டோம். அதிலிருந்து விடுபட்டு நமக்கான ஓய்வு நேரத்தில் படிப்பது, உடல் நலத்தைக் கவனிக்கச் செலவிடுவது போன்றவற்றைச் செய்யலாம். அதைத்தான் என் ஓவியமும் உணர்த்து கிறது” என்கிறார் சசிதர்.

சென்னை கவின் கலைக் கல்லூரி ஓவிய மாணவி ஹர்ஷனா முரளி, வாழ்க்கைப்பாட்டுக்காக உழைத்துத் தேய்பவர்களை மையமாக வைத்துப் படம் வரைந்திருந்தார். “இதுவரை ஒரு குறிப்பிட்ட கருப்பொருளில் நான் ஓவியம் வரைந்ததில்லை. உழைப்பாளர்கள் குறித்து ஓவியம் வரைந்தது புது அனுபவமாக இருந்தது. உழைப்பு, உரிமை போன்றவை குறித்து நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது” என்று தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in