

சில மாதங்களுக்கு முன்பு, என் பழைய நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். நாற்பதுகளில் இருக்கும் பலர் போலவே, அவரும் வாழ்க்கையில் நன்றாக முன்னேறியவர். ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் உயர்ந்த பதவி, நல்ல கார், சொந்த வீடு, குடும்பத்துடன் வெளிநாட்டுச் சுற்றுலா என ஒரு திருப்திகரமான வாழ்க்கையை மேற்கொண்டு வருபவர்.
நாங்கள் காபி அருந்தியவாறே பேசிக் கொண்டிருந்தபோது, தான் பார்க்கும் வேலை மிகவும் அழுத்தமாகிவிட்டதாக அவர் கூறினார். “சில நேரங்களில் இந்த கார்ப்பரேட் வாழ்க்கையை விட்டு வெளியேற வேண்டும் போலத் தோன்றுகிறது” என்று சிரித்தார். பிறகு சிறிது நேரம் அமைதியாக இருந்தார். “ஆனால் உண்மையில் அது சாத்தியமில்லை” என்றார்.
“ஏனெனில், என் சம்பளம் நின்றுவிட்டால், எல்லாமே நின்றுவிடும்” என்ற அவரின் பதில், என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஏனெனில், நம்மில் பலர் சிந்திக்க விரும்பாத ஒரு உண்மையை அது வெளிப்படுத்துகிறது. அதிக வருமானம் இருப்பதால் மட்டும் ஒருவர் செல்வந்தர் ஆகிவிட மாட்டார்.
வருமானமும், செல்வமும் ஒன்றல்ல: உண்மையில், அதிகம் சம்பாதிப்பவர்களில் பலர், அடுத்த மாத சம்பளத்தை நம்பியே வாழ்கிறார்கள். இதற்கு காரணம்? வருமானமும், செல்வமும் – வேறு, வேறு என்பதை அவர்கள் உணர்வதில்லை. வருமானம் என்பது நாம் சம்பாதிப்பது. செல்வம் என்பது நாம் முதலீடு செய்து பாதுகாப்பாகச் சேர்த்து வைத்திருப்பது. நம்மில் பலரும், அதிகம் சம்பாதிப்பதே, நிதித் தேவைக்கான நிரந்தரத் தீர்வு என்று நம்பி வளர்கிறோம்.