

பல்வேறு வகையான வாகனங்கள், இயந்திரங்களுக்கு அடிப்படை அதன் உதிரி பாகங்கள். இந்த உதிரி பாகங்கள் வார்ப்பட முறையில் தயாரிக்கப்படுகின்றன. இதனால் ஒட்டுமொத்த உற்பத்தித் தொழில் துறையும் வார்ப்பட உற்பத்தி நிறுவனங்களை நம்பியே உள்ளன. உலோகத்தை உருக்கி, உதிரி பாகங்களுக்கு தேவையான (சிக்கலான) வடிவம் கொண்ட ஒரு குறிப்பிட்ட அச்சில் (Mould) ஊற்றி, குளிரவைத்து திண்ம வடிவப் பொருளை உருவாக்கும் முறை வார்ப்படம் (Casting) ஆகும். இதை ‘வார்ப்பு’ என்றும் சொல்லலாம்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வார்ப்பட தொழிலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் 5,000-க்கும் அதிகமான வார்ப்பட நிறுவனங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 750 வார்ப்பட நிறுவனங்கள் உள்ள நிலையில், தொழில் நகரான கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 600 வார்ப்பட நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 450 நிறுவனங்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (எம்எஸ்எம்இ) பிரிவைச் சேர்ந்தவை. தமிழகத்தில் இத்துறையில் நேரடியாக 5 லட்சம் பேரும் மறைமுகமாக 10 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றினாலும் 80 சதவீதத்திற்கு மேல் வடமாநில தொழிலாளர்களைக் கொண்டுதான் இத்துறை சார்ந்த நிறுவனங்கள் செயல்படுகின்றன. நகர விரிவாக்கம் உள்ளிட்ட காரணங்களால் வார்ப்பட தொழில் நிறுவனங்கள் புறநகர் பகுதிகளுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தொழில் அமைப்புகள் சார்பில் கோவையில் அரசூர் பகுதியில் வார்ப்பட தொழில் துறையினர் இணைந்து தொழிற்பேட்டை அமைத்து அங்கு வார்ப்பட உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றனர்.