

இது ஏஐ யுகம். நம் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது ஏஐ. பள்ளிக் குழந்தைகள் தொடங்கி சர்வதேசத் தலைவர்கள் வரை அனைவரின் எண்ணங்களிலும் ஏஐ நிறைந்துள்ளது.
மின்சாரம் நம் வாழ்வில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களுக்கு நிகரானது ஏஐ விளைவுகள். இச்சூழலில் ஏஐயை எவ்வாறு நம் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்வது என்று அறிவது அவசியம்.
பல்வேறு துறைகள் சார்ந்த ஏஐ பயன்பாடுகளை அறிமுகப்படுத்துவதே ஏஐவாசி என்னும் இத்தொடரின் நோக்கம். தொழில்நுட்பச் சிக்கல்கள் இன்றி. எளியமொழியில் ஏஐ கற்போம். வாருங்கள்.
ஏஐயுடன் சேர்த்து உச்சரிக்கப்படும் ஒரு சொல் 'வேலை'. இன்னும் சரியாகச் சொன்னால் 'வேலையிழப்பு'. இந்த ஏஐ அலை நம் வேலைகளைக் கபளீகரம் செய்துவிடும். இது மனித குலத்துக்கு வந்திருக்கும் நவீனப் பயங்களில் முதன்மையானது. உண்மையிலேயே ஏஐ ஒரு 'வேலைக்கொல்லியா'? அல்லது இது வெறுமனே ஒரு வெற்றுப்பயம் தானா? ஆராய்வோம். வாருங்கள்.
முதலில் வேலை என்றால் என்ன? ஒரு காலத்தில் உடல் உழைப்பு வேலையின் முக்கிய அங்கமாக இருந்தது. தொழிற்புரட்சி வந்தபோது இதில் ஒரு மாற்றம் வந்தது. மனிதனின் உடல் ஆற்றலை எளிதில் விஞ்சிடும் கருவிகள் வந்தன.
வேலைகளின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. அறிவுசார் வேலைகள் பரவலாயின. அப்படியானால் முன்னொரு காலத்தில் அறிவுசார்ந்த வேலைகளே கிடையாதா என்றால் இருந்தன. ஆனால் ஒப்பீட்டளவில் அவற்றில் ஈடுபட்டிருந்தவர்களின் எண்ணிக்கை குறைவு.
இன்றைய சூழலில் அறிவுசார் வேலைகள் அனைத்துத் துறைகளிலும் அதிகரித்துள்ளன. ஒருவர் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்ப்பவையே வேலைகள். அதன் மூலம் வாழ்வை எளிதாக்குவதே வேலை. இது உடலாற்றால் மூலமாகவும், அறிவாற்றல் மூலமாகவும் நிகழலாம்.