

உலகளாவிய நிதிச் சந்தையில் ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், உலக பங்குச்சந்தை தரவரிசையில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி தைவான் 5-ம் இடத்தை பிடித்துள்ளது. புளூம்பெர்க் தரவுகளின்படி, தைவானின் மொத்த சந்தை மதிப்பு 4.95 லட்சம் கோடி டாலராக உயர்ந் துள்ளது.
அதேநேரம், இந்திய பங்குச்சந்தையின் மதிப்பு 4.92 லட்சம் கோடி டாலராக சரிந்துள்ளது. தற்போது உல களவில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு அடுத்த படியாகதைவான் 5-வது பெரிய பங்குச் சந்தையாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார அளவுடன் (GDP) ஒப்பிடும்போது தைவான் மிகச்சிறிய நாடு. அதன் மக்கள் தொகையும் வெறும் 2.3 கோடிதான். ஆனாலும், பங்குச்சந்தையில் அது இந்தியாவை முந்தியது எப்படி? இதன் பின்னணியில் உள்ள காரணங்களையும், இந்திய சந்தைக்கு ஏற்பட்டுள்ள சவால்களையும் விரிவாகப் பார்ப்போம்.
ஒரு நிறுவனத்தின் அசுர வளர்ச்சி
தைவானின் இந்த அசாத்திய வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணம், உலகப் புகழ்பெற்ற செமிகண்டக்டர் மற்றும் சிப் தயாரிப்பு நிறுவனமான தைவான் செமிகண்டக்டர் மேனுபேக்சரிங் கம்பெனி (டிஎஸ்எம்சி) ஆகும். தைவான் பங்குச்சந்தையின் முதன்மை குறியீடான 'TAIEX'-ல் டிஎஸ்எம்சி நிறுவனம் மட்டுமே சுமார் 42% பங்களிப்பைக் கொண்டுள்ளது.
நடப்பு 2026-ம் ஆண்டில் மட்டும் (5 மாதத்தில்) இந்த நிறுவனத்தின் பங்குகள் சுமார் 49% வரை உயர்ந்துள்ளன. உலகெங்கும் ஏற்பட்டுள்ள ஏ.ஐ. புரட்சிக்குத் தேவையான அதிநவீன சிப்களை தயாரிப்பதில் டிஎஸ்எம்சி உலகளவில் முதலிடத்தில் உள்ளதே இதற்குக் காரணம்.