

இந்திய மக்கள் தொகையில் (140 கோடி) முதியவர்கள் என அறியப்படும் 60 வயதுக்கு மேலானவர்களின் எண்ணிக்கை சுமார் 15 கோடி. 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகையில் இவர்களின் பங்கு சுமார் 8.6%. 2036-ல் இது சுமார் 23.6 கோடியைத் தொடும் எனத் தெரிகிறது.
தென் மாநிலங்கள், இமாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் முதியோர் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கிறது. 2036-ல் கேரளாவில் நான்கில் ஒருவர் முதியவராக இருப்பார் என ஓர் அறிக்கைக் கூறுகிறது. இந்திய முதியோரின் எண்ணிக்கையானது ரஷ்யாவின் மொத்த மக்கள் தொகைக்கு சமமாகும் என்பதோடு ஆறு மத்திய வளைகுடா நாடுகளின் மொத்த மக்கள் தொகையைப் போல் இரண்டரை மடங்கு ஆகும்.
இன்றைக்கு முதியவர்களில் ஐந்தில் ஒருவரிடம்தான் மருத்துவக் காப்பீடு உள்ளது. இதில் ஏறக்குறைய 70% பேர் பொருளாதார ரீதியில் குடும்பத்தில் ஒருவரைச் சார்ந்தோ அல்லது தனக்குக் கிடைக்கும் சொற்ப ஓய்வூதியத்தை நம்பியோ வாழ்ந்து வருகின்றனர். முதியவர்களால் நுகரப்படும் பொருள்கள், சேவைகள் சார்ந்த பொருளாதாரம் ‘சில்வர் பொருளாதாரம்’ என அழைக்கப்படுகிறது.
இதன் மதிப்பு சுமார் ரூ.73 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது வருங்காலத்தில் பல மடங்கு அதிகரிக்கும் என்று நிதி ஆயோக் அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் முதியோரின் தேவைகளைக் கருத்தில் கொண்டு பிரபல FMCG நிறுவனமான ஐ.டி.சி. ‘ரைட் ஷிஃப்ட்’ என்கிற பெயரில் பல பொருள்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அவர்களின் எலும்பில் இருக்கும் மினரல் அடர்த்தி ஒவ்வொரு பத்தாண்டுக்கும் சுமார் 5 முதல் 10%, தசை அடர்த்தி 3-5% குறைவதாக ஒரு ஆய்வு தெரிவிப்பதாக இந்நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.