

இந்தியாவுக்கு மிகவும் நம்பகமான வர்த்தக கூட்டாளி ரஷ்யா. சோவியத் ரஷ்யா காலத்திலேயே இரு நாடுகளுக்கு இடையே வலுவான உறவு இருந்தது. 1991-ல் சோவியத் ரஷ்ய ஒன்றியம் உடைந்த பிறகும் ரஷ்யா, இந்தியா இடையிலான வர்த்தக உறவு மேலும் வலுவடைந்தது. இந்நிலையில், இந்த உறவில் புதியதொரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதார தடையால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்யா, இந்தியாவில் முடங்கிக் கிடக்கும் கோடிக் கணக்கான இந்திய ரூபாயைப் பயன்படுத்தும் விதத்தை மாற்றியமைக்கும் ஒரு நடவடிக்கையாக, அரசுக்குச் சொந்தமான ஸ்பெர்பேங்க் (Sberbank), நிஃப்டி50-உடன் இணைக்கப்பட்ட, காலவரையறை கொண்ட (closed-ended) மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
இதன் மூலம், ரஷ்ய முதலீட்டாளர்கள் தங்கள் கூடுதல் ரூபாய் கையிருப்புகளை இந்தியப் பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய ஒரு வழியை திறக்கிறது. இந்த அமைப்பு ரஷ்யாவின் நாணயப் பிரச்சினைக்கு ஒரு வழியை வழங்குகிறது. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்கும் இந்தியா அதற்காக இந்திய ரூபாயை வழங்குகிறது.
ஆனால், அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக இந்திய ரூபாய், டாலர்களாக சுதந்திரமாக மாற்ற முடியாத சிறப்புக் வோஸ்ட்ரோ கணக்குகளில் (Vostro Accounts) செலுத்தப்படுகிறது. புதிய முதலீட்டுத் திட்டம், சும்மா இருக்கும் இந்தப் பணத்தை இந்திய மூலதனச் சந்தையில் செலுத்துவதற்கு உதவுகிறது, இதன் மூலம் குவிந்துள்ள ரூபாய் இருப்பு ஒரு முதலீட்டு வாய்ப்பாக மாறுகிறது.
ஆரம்பத்தில், ரஷ்யாவின் ஸ்பெர்பேங்க், இந்தியாவின் நிஃப்டி50 குறியீட்டுடன் இணைக்கப்பட்ட ஒரு மியூச்சுவல் ஃபண்டைத் தொடங்கும். இது ரஷ்யர்களுக்கு இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் அதிக நீர்மைத்தன்மை கொண்ட நிறுவனங்களில் பல்வகைப்பட்ட வெளிப்பாட்டை (diversified exposure) வழங்குகிறது.