

உலக அளவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த ஓராண்டுக்கும் மேலாக வரலாறு காணாத வகையில், ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. இதில் உலக நாடுகள் தங்கள் அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிப்பதால் தங்கத்தின் விலை உயர்கிறது. ஆனால் தொழிற்சாலைகளில் தேவை அதிகரித்திருப்பதால் வெள்ளியின் விலை உயர்கிறது. இந்த வரிசையில் 'சிவப்புத் தங்கம்' (Red Gold) என்று அழைக்கப்படும் தாமிரமும் (Copper) இணைந்துள்ளது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளிக்கு அடுத்தபடியாக, முதலீட்டாளர்களை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது தாமிரம்.
தாமிரம் என்பது செம்பு என்றும் அழைக்கப்படும் ஒரு முக்கியமான உலோகம். இது மின்சாரம் மற்றும் வெப்பத்தைக் கடத்துவதில் சிறந்தது. மின் கம்பிகள், பாத்திரங்கள், நாணயங்கள் மற்றும் கட்டிடப் பொருட்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மனித உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்தாக, நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்தவும், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும் இது அவசியம். மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI), ராணுவ தளவாடம், பசுமை எரிசக்தி சாதனங்கள் தயாரிப்புக்கு அவசியமான கனிமமாக தாமிரம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.