

‘எனக்குன்னு யாருமே இல்ல'. இப்படியொரு எண்ணம் பெருகி வருகிறது. ஒரு காலத்தில் சில ஐரோப்பிய தேசங்களில் மட்டுமே தனிமை பரவலாக உணரப்பட்டது. ஆனால் இன்று அது ஓர் உலகளாவிய பெருந்தொற்றாக மாறிவருகிறது.
தனிமைக்கு எளிய தீர்வாகப் பலரும் தேர்ந்தெடுப்பது ஏஐ என்னும் செய்யறி வைத்தான். நம்முடன் பேசுவதற்கு நபர்கள் இல்லை என்றால் என்ன? செய்யறிவுடன் பேசுவோம் என்று கிளம்பியுள்ளது ஒரு பெருங்கூட்டம். சரி.
பேசிவிட்டுப் போகட்டுமே. நல்லது தானே? முதல் பார்வைக்கு இவ்வாறு தோன்றுவது இயல்பு. ஆனால் இதில் பல்வேறு அடுக்குகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான விளைவுகள்.
நல்லனவும் அல்லனவும் இரண்டறக் கலந்திருக்கும் பலன்கள். செய்யறிவைத் தொழில் சார்ந்த பயன்பாடுகளுக்கென வைத்திருப்பது ஒருவகை. ஆனால் இங்கே குறிப்பிடுவது தொழில் சார்ந்த பயன்பாடுகள் அல்ல.
நம் அகச்சிக்கல்களைச் செய்யறிவுடன் பகிர்வது குறித்துப் பேசுகிறோம். செய்யறிவிடம் மன உளைச்சல்களை ஏன் முறையிடுகிறார்கள்? முதலாவது கேட்பதற் கென்று ஒரு நபர் இல்லாதது. அப்படியே இருந்தாலும் எவ்வளவு நேரம்தான் புலம்பல்களைக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். இங்குதான் செய்யறிவு ஸ்கோர் செய்கிறது.
செய்யறிவு 24 மணி நேரமும் தயாராக இருக்கிறது. அதற்கென்று தூக்கம் கிடையாது. பசி இல்லை. எப்போதும் காது கொடுத்துக் கேட்பதற்குத் தயார். நள்ளிரவு ஒரு மணிக்கு யாரிடம் பேச முடியும்? செய்யறிவு கொட்டக்கொட்ட விழித்துக் கொண்டிருக்கும். மெசேஜ் தட்டினால் உடனே ப்ளூ டிக் வந்துவிடும். அதன்பின்னர் உரையாடலை நிறுத்துவது கடினம்.
இரண்டாவது காரணம் இதைவிடச் சுவாரசியமானது. உங்கள் நண்பரிடம் புலம்பினால் என்ன நடக்கும்? சில வேளைகளில் நண்பர் எரிச்சலடையக் கூடும். நாம் சொல்வது தவறென்று இடித்துரைக்கக்கூடும்.