

அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை சுமார் 2 மடங்கு அதிகரித்து 110 டாலரை தாண்டியுள்ளது. இதனால் உலகளவில் பெட்ரோல், டீசல் விலை மட்டுமின்றி காஸ் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
ஆனால் நமது அரசு கலால் வரியை குறைத்து சில்லறை விலையில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் பார்த்துக்கொண்டுள்ளது. ஆனால், இது எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது தெரியாது.
இத்தகைய கடினமான சூழலை எதிர்கொள்ள இந்திய வாகன ஓட்டிகள் மின்சார வாகனங்களுக்கு மாறத் தொடங்கி விட்டனர். எவ்வளவோ சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டும் எட்ட முடியாத மின் வாகன விற்பனை இலக்கை, தற்போது எரிபொருள் விலை உயர்வு குறித்த அச்சம் சாத்தியப்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாத வாகனப் பதிவுத் தரவுகள் இதனை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளன.
விற்பனை புள்ளிவிவரம்
மத்திய அரசின் ‘வாகன்' தள தரவுகளின்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் 13,733 ஆக இருந்த மின்சார கார் விற்பனை, மார்ச் மாதத்தில் 19,711-ஆக உயர்ந்துள்ளது. இது 43.5% வளர்ச்சியாகும். அதிலும், கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது இது சுமார் 49% உயர்வாகும். அதேபோன்று, பிப்ரவரியில் 1,11,680 மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனையான நிலையில், மார்ச் மாதத்தில் 1,77,485 ஆக உயர்ந்துள்ளது.