

கீரையை கட்டாக விற்பதற்கு பதில், இலைகளைக் கிள்ளி, அதில் ஒட்டியுள்ள மண்னையும் பூச்சி மருந்து மற்றும் பிற அழுக்குகளையும் கழுவி, சுத்தம் செய்து, `அப்படியே சமைக்கலாம்' என்பது போலக் கொடுப்பது ஒருவகை மதிப்பு கூட்டல் சேவை.
இதுபோல சுத்தமான நெய், நல்ல கடலை மாவு, சீனி சேர்த்து, பக்குவமாய்க் கிண்டி, ஒரு ருசியான மைசூர்பாகு செய்து கொடுப்பது மற்றொரு மதிப்புக் கூட்டல் சேவை. பொருட்களை (நெய், கடலை மாவு, சீனி) அப்படியே விற்றால் `கமாடிட்டி'. சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் தயாரித்து (மைசூர்பாகு) விற்றால் அது `ப்ராடெக்ட்'. செய்வதை சிறப்பாகவும் தொடர்ந்து ஒரே மாதிரியாகவும் செய்து வந்தால் நாளடைவில் அதுவே `பிராண்ட் 'ஆகிவிடுகிறது.
கமாடிட்டியைவிட ப்ராடக்ட்டுக்கும், ப்ராடக்ட்டுகளைக் காட்டிலும் பிராண்டட் பொருளுக்கும் விலை அதிகம். லாபமும் அதிகம். ஆனால், அவை சும்மா வராது. அதற்கு சிந்தனையும் தொடர் உழைப்பும் அவசியம். இப்படிச் செய்தால் மட்டுமே கூடுதல் விலை கொடுப்பார்களா? மற்றவர்களைக் காட்டிலும் அதிக விலைக்கு விற்க முடியுமா? என்று சந்தேகம் வரலாம். மதிப்பு என்பது பொருளில் இருப்பது மட்டும் இல்லை, வாங்குபவர் மனதிலும் இருக்கிறது.
இப்படி புரிந்து கொண்டவர்கள், அப்படி செய்ய முடிந்தவர்கள், அதிக விலையில் விற்கலாம். அதிக எண்ணிக்கையில் விற்றால் மட்டுமே லாபம் என்று அலைய வேண்டியதில்லை. சென்ற அத்தியாயத்தில் பார்த்த `மதிப்புக் கூட்டு சேவை’ கட்டுரை படித்த சிலர் என்னிடம் பேசினார்கள். அவர்களில் ஒருவர் தெரிவித்தது, ”25 ஆண்டுகளுக்கு முன் ஒரு நிறுவனத்துக்கு கட்டுமான வேலை செய்து கொடுத்தேன்.