

யுடியூபுக்கு முன்பே, 2002-ல் லிங்க்டுஇன், 2003-ல் மைஸ்பேஸ், 2004-ல் முகநூல் ஆகிய சமூக ஊடகங்கள் வந்துவிட்டன. ஆனாலும், தற்போது வரை மிக அதிகமான வீடியோக்கள் பகிரப்படும், மாதம் 280 கோடி பேர் பயன்படுத்தும் தளமாக முதலிடத்தில் இருப்பது யுடியூப். கல்வி, பொழுதுபோக்கு, செய்திகள், பயிற்சிகள், விமர்சனங்கள் என்று பல்வேறு வகைகளில் வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன.
பேபால் அலம்ஸ் சார்ட் ஹர்லி, ஸ்டீவ் சென் மற்றும் ஜாவ்டு காரிம் ஆகியோர் 2005-ல் உருவாக்கிய யுடியூபை, 2006-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் விலைக்கு வாங்கியது. முகநூலிலும், இன்ஸ்டாகிராமிலும் கூட பதிவு செய்யப்படும் வீடியோக்களுக்கு பார்வைகள் எண்ணிக்கையைப் பொருத்தும் வேறு சிலவற்றின் அடிப்படையிலும் பணம் வழங்கப்படுகிறது. சமூக ஊடங்களில் வீடியோ உள்ளிட்ட ‘கன்டென்ட்’ வழங்குபவர்களுக்கு ஒரு வழியில் அல்ல, பல வகைகளில் வருமானம் கிடைக்கிறது.
முதலாவதும் எளிமையானதும், அந்தக் ‘கன்டென்ட்’ இடையே காட்டப்படும் விளம்பரங்களுக்காக, யுடியூபில் அட்சென்ஸ் (AdSense) வழங்குவது போல, அந்தந்தத் தளங்களே வழங்கும் தொகை. இம்முறையில், விளம்பரம் தரும் நிறுவனங்களுக்கும் விடியோ பதிபவர்களுக்கும் நேரடித் தொடர்பில்லை. இரண்டாவது வழி, வியாபார நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, நேரடியாக விளம்பரங்கள் பெற்று, வருமானம் பார்ப்பது.