

சென்ற அத்தியாயத்தில் பார்த்த ‘வில்லேஜ் குக்கிங் சேனலில்’, தமிழில்தான் வீடியோ போடுகிறார்கள். சிலவற்றை 5 கோடி பேர் கூட பார்க்கிறார்கள் என்றால், அவர்களது வீடியோக்கள் தமிழ்நாட்டையும் தாண்டி, தமிழ் தெரியாதவர்களும் பார்க்கிறார்கள் என்று பொருள். இவர்களைப் போன்றவர்களுடைய வெற்றிக் கதைகளை யுடியூபில் வீடியோக்களாக போட்டு அதற்கு பல லட்சம் பார்வைகள் பெற்ற யுடியூப் சேனல்களும் உண்டு.
மு.பெரியதம்பி ஐயா தலைமையில், சுப்பிரமணியன், முருகேசன், அய்யனார், தமிழ்ச்செல்வன் மற்றும் முத்துமாணிக்கம் என்ற குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து, விறகடுப்பு, மண்சட்டி போன்றவற்றை வைத்து சமையல் செய்து, 2018-ம் ஆண்டு முதல் வீடியோக்களை வெளியிடுகிறார்கள்.
கப்பல்கள், ஆகாய விமானம், கார் வண்டிகள், ரயில்கள் போகாத ஊர்களுக்கும் இணையம் வழி அமைத்துக் கொடுக்கிறது. வீட்டுக்குள்ளே அறைகளில் முடங்கிக் கிடப்போரையும் சென்றடைகிறது.
சுறுசுறுப்பாக இருப்பவர்களை, ‘ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க மாட்டார்கள்’ என்று சொல்வது உண்டு. அந்த வகையில் பார்த்தால் தற்போது உலகில் பெரும்பாலானவர்கள்’ சுறுசுறுப்பானவர்கள்’ ஆகிவிட்டார்கள். சும்மா இருக்கும் நேரங்களில் மட்டுமல்ல. தூங்கும் நேரம் தவிர, மற்ற எல்லா நேரங்களிலும் ஸ்மார்ட்போனில் எதையாவது பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். ஸ்மார்ட்போனிலிருந்து செய்தி வரும் சத்தம் கேட்காவிட்டால் கூட அவர்களாக ஒரு வியாதி போல, அடிக்கடி எடுத்துப் பார்க்கிறார்கள்.
ஒரு காலத்தில் கையை விட்டு சைக்கிள் ஓட்டிய விடலைகள் போல இப்போது பல பெரியவர்களும் மோட்டார் வாகனம் ஓட்டும்போது அலைபேசியில் பேசுகிறார்கள். ஸ்மார்ட்போனைப் பார்த்தபடி வண்டி ஓட்டுகிறார்கள். வண்டி ஓட்டிச்செல்கிற போது, இடையில் வரும் சிக்னல்களில் நிற்கிற அந்த ஒரு சில நிமிடங்களில் இயல்பாக ஸ்மார்ட்போனை எடுத்து, எதையாவது பார்க்கிறார்கள்.