

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு புகழ்பெற்ற தொலைக்காட்சியின் பிரபலமான நபர் ஒருவர், அந்த தொலைக்காட்சி நிறுவனத்தை விட்டு விலகினார். அவர், அடுத்து, என்ன செய்யப் போகிறார்? வேறு எந்தத் தொலைக்காட்சியில் சேரப் போகிறார்? என்பதைத் தெரிந்துகொள்ள பலரும் ஆர்வமாக இருந்தார்கள். ஆனால் அவர் யாரும் எதிர்பாராத வகையில் சொந்ததமாக ஒரு யுடியூப் சேனல் தொடங்கினார்.
ஓராண்டுக்குப் பிறகு, அவர் விலகிய அதே தொலைக்காட்சியில் பணியிலிருந்த மற்றொரு நபரை சந்தித்தபோது, “இப்போது உங்கள் தொலைக்காட்சி நிர்வாகத்தில் மாறுதல்கள் வந்திருக்கின்றனவே. விலகிய அந்த நபரை மீண்டும் சேர்க்கலாமே” என சாதாரணமாகக் கேட்டேன்.
சிரித்தபடி அவர் பதிலுக்கு கேட்டார். “தொலைக்காட்சி அவரை வேண்டாம் என்றா சொல்லும்! ஆனால், அவர் வர வேண்டுமே” என்றார். “ஏன் அவர் வர மாட்டாரா?” என்றேன்.
“அவர் இங்கு வாங்கிக் கொண்டிருந்த ஊதியத்தைப் போல, இரண்டு, மூன்று மடங்கு வருமானம் ஈட்டுகிறார். அதை விட்டுவிட்டு, அவர் ஏன் இங்கு வரப் போகிறார்!” என்றார். அவர் மட்டுமல்ல. அப்படி பத்திரிக்கை துறையில் இருந்து விலகி, சொந்தமாக யுடியூப் சேனல் ஆரம்பித்து, அந்தப் பத்திரிக்கை மூலம் பழக்கமானவர்களைப் பேட்டி எடுத்து, கணிசமான வருமானம் ஈட்டிக்கொண்டிருக்கும் மற்றொருவரும் கவனிக்கத்தக்க எடுத்துக்காட்டு.
நிலைமை அதுதான். கடந்த ஏழு ஆண்டுகளில் பலருக்கும் ஒரு புதிய வருமான வாய்ப்பாக உருவாகியிருப்பது, யுடியூப் சேனல்கள். தனி நபர்கள் மட்டுமில்லை. அனேகமாக எல்லாத் தொலைக்காட்சி நிறுவனங்களும், பெரும்பாலான, பிரபல, தின, மாத இதழ்களும் கூட சொந்தமாக பல யுடியூப் சேனல்கள் ஆரம்பித்துவிட்டன. ஆம். ஒவ்வொன்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட சேனல்களை நடத்துகின்றன. அவற்றில் ஏராளமானவர்கள் பணிபுரிகிறார்கள்.