

ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் கதிரவன், இரண்டு நாட்களில், பெரிய அமைப்பு ஒன்றின் தலைவரைச் சந்திக்க வேண்டும். ``உங்கள் அமைப்புக்கான புதிய இணையதளத்தை எங்கள் நிறுவனத்தால் உருவாக்கித் தர முடியும்” என்று பேசி, எப்படியாவது பல லட்ச ரூபாய் வியாபார வாய்ப்பைப் பெற்று வரவேண்டும்.
இந்த முக்கியமான சந்திப்புக்காக கதிரவன் ஆயத்தம் ஆகிறார். அவர் பணிபுரியும் நிறுவனம், அதன் திறன்கள், ஏற்கெனவே செய்திருக்கும் இணையதள உருவாக்கும் பணிகள் பற்றியெல்லாம் கதிரவனால் சிறப்பாக எடுத்துச் சொல்ல முடியும்.
ஆனால் அது மட்டும் போதாதே! எந்த அமைப்புக்கான இணையதளமோ, அந்த அமைப்பு பற்றியும் அவர்களுக்கு பயன்தரக் கூடிய விஷயங்கள் எவை என்பது குறித்தும் தெரிந்தால்தான், கதிரவனால், அந்தப் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிக்க இயலும். அமைப்பு, அதன் நோக்கம், செயல்பாடுகள் குறித்தெல்லாம் மேலோட்டமாகத் தெரிந்துகொண்டால் போதாது.
சில ஆண்டுகள் அனுபவம் உள்ள கதிரவனால் அவற்றைத் தேடிப் பெற்றுவிட முடியும். ஆனால், அதற்கு ஒரு வாரமாவது ஆகும். ஏற்கெனவே உள்ள வேலைகளுக்கு இடையே இரண்டே நாட்களில் அதை எப்படிச் செய்வது? அது அவருக்கு ஒரு சிக்கலே இல்லை. இதுபோன்ற தகவல்களைத் தருவதற்கு நிறுவனங்கள் இருக்கின்றன, அவற்றில் பல துறைகள் சார்ந்த அனுபவமிக்கவர்கள் `ஆன்லைன் கன்சல்டன்ட்’ களாக தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.