

“கணக்கு எழுதுவது, ஜாப்டைப்பிங் போன்ற உடல் உழைப்பு வேலைகள் செய்து சில, பல ஆண்டுகள் ஆகின்றன. நான் மேலாளர் அல்லது பொறியாளர், அல்லது வேறு ஏதோ தொழில்முறை விற்பன்னராக உள்ளேன். என் திறமையும், அனுபவமும் வித்தியாசமானது, சிறப்பானது. என் போன்றவர்களுக்கு கூடுதல் வருமானம் பார்க்க வாய்ப்பு உண்டா?” என்று சிலர் கேட்கலாம்.
ஓர் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிகிறீர்கள். உங்கள் துறை சார்ந்த அனுபவம் செழுமையானது. அது ஏன் உங்கள் நிறுவனத்துக்கு மட்டும் பயன்பட வேண்டும்? அந்த அனுபவத்தை உங்களுக்குக் கிடைக்கும் ஒரு ஊதியத்துக்கு மட்டும் ஏன் பயன்படுத்த வேண்டும்? நிறுவனம், அடுத்தடுத்து பதவி உயர்வும், கூடுதல் பொறுப்பும் கொடுத்துக்கொண்டு இருந்தால் சரி. உங்களால் வேறு எதுவும் செய்ய முடியாது. செய்யவும் கூடாது. தவிர, செய்யத் தேவையில்லை. அதற்கு நேரமும் இருக்காது.
வேண்டிய பணமும், திருப்தியும் அந்த ஒரு நிரந்தர வேலையிலேயே கிடைத்து விடும். அப்படிப்பட்ட நிலையில், நீங்கள் உங்கள் வேலை குறித்து மேலும் தெரிந்துகொள்ள, படிக்க உங்களுடைய நேரத்தை செலவு செய்யலாம். அதுதான் சரி. ஆனால், அப்படிப்பட்ட அங்கீகாரமும் வருமானமும் கிடைக்காதவர்கள், தங்கள் அனுபவத்தையும் திறமையையும் வேறு வழிகளிலும் காசாக்கலாம்.