

நவீன உலகம் இன்று டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் விரல் நுனியில் சுழன்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நொடியும் இணைய வெளியில் உருவாகும் கோடிக்கணக்கான தரவுகளைப் பாதுகாத்து, முறைப்படுத்தி, பயனுள்ள தகவல்களாக மாற்றும் கேந்திரங்களாகத் திகழ்பவைதான் ‘தரவு மையங்கள்’ (Data Centers).
அதிலும் குறிப்பாக, நான்காம் தொழிற்புரட்சி என வர்ணிக்கப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வருகையானது, இத்துறையில் வரலாற்றில் இல்லாத ஒரு மாபெரும் எழுச்சியையும், மாற்றத்தையும் விதைத்திருக்கிறது.
இந்த மாற்றத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில், ரூ.91,000 கோடி முதலீட்டில் 1 ஜிகாவாட் (GW) திறன் கொண்ட மிக்பெரிய தரவு மையத்தை அமைக்க, சுமார் ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரப் பயணத்தில், இது ஒரு முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
சிந்திக்கும் ‘ஆராய்ச்சிக்கூடங்கள்’ - முதலில், சாதாரணத் தரவு மையங்களுக்கும், செயற்கை நுண்ணறிவுத் (AI) தரவு மையங்களுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்வது அவசியம். பாரம்பரியத் தரவு மையங்கள் என்பவை, இணைய சேவையகங்கள் (Servers), சேமிப்பு அமைப்புகளைக் கொண்ட பாதுகாப்பான இடங்கள்; நாம் கேட்கும் தகவல்களைத் திரும்பத்தரும் ‘டிஜிட்டல் சேமிப்புக் கிடங்குகள்’. ஆனால், இன்றைய நவீன AI தரவு மையங்கள் அப்படியல்ல. இவை தரவுகளைக்கொண்டுத் தாமாகவே சிந்தித்து, கணக்கிட்டு, புதிய முடிவுகளை உருவாக்கும் நவீன ‘ஆராய்ச்சிக்கூடங்கள்’ போன்றவை.