

பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் இன்னமும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? அவர் எப்போதோ மறைந்துவிட்டாரே! என்று நினைக்கலாம். உண்மைதான். ஆனால் இப்போதும் ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளில் அவருடைய குரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அவர் பாடிய பல பாடல்கள், அவருடைய பெயரில் உள்ள யுடியூப் சேனலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பலரும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக, 2023-ல் பதிவேற்றப்பட்ட, `வேயுறு தோளி பங்கன்' என்ற திருஞானசம்பந்தர் எழுதிய ஒரு பாடல் மட்டும் இதுவரை 49 லட்சம் முறை கேட்கப்பட்டிருக்கிறது. இது ஒரு எடுத்துக்காட்டுதான். இதுபோல எத்தனையோ பக்திப் பாடல்கள், குழந்தைகளுக்கான வீடியோக்கள், திரையிசைப் பாடல்கள் தினந்தோறும் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அந்த சேனல்களுக்கு பல ஆண்டுகளாக வருமானம் போய்க்கொண்டே இருக்கிறது.
யுடியூப் தவிர வேறு சில சமூக ஊடகங்கள் மூலமாகவும் பலர் வருமானம் ஈட்டுகிறார்கள் என்று சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். முன்பு இன்ஸ்டா நிறுவனம், ‘ரீல்ஸ்’களை பதிவிடுவோருக்கு பார்வை எண்ணிக்கை அடிப்படையில் பணம் கொடுத்தது. இப்போது அது நிறுத்தப்பட்டிருக்கிறது.