

ஓய்வுபெற்ற மூத்த குடிமகன் கிருஷ்ணன். ஆபத்தை விரும்பாதவர். எனவே, தனது ஓய்வுக்கால சேமிப்புத் தொகை முழுவதையும் வங்கி நிரந்தர வைப்புகளில் முதலீடு செய்துள்ளார். ஆண்டுக்கு 7 முதல் 8% வரை வட்டி கிடைக்கிறது.
சமீபத்தில், முன்னணி நாளிதழ்களில் வெளியான முழுப்பக்க விளம்பரங்கள் அவரது கவனத்தை ஈர்த்தன. பத்திரங்களில் முதலீடு செய்தால், ஆண்டுக்கு 14% வரை நிலையான வருமானம் கிடைக்கும் என்றும், அவை ‘Secured’ மற்றும் ‘Credit-rated’ என்றும் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தன. அப்படியானால், கிருஷ்ணன் தனது வங்கி வைப்புகளை உடைத்து சுமார் 2 மடங்கு லாபம் தரும் இந்தப் பத்திரங்களில் முதலீடு செய்யலாமா?
பத்திரம் (Bonds) என்றால் என்ன?
பத்திரம் என்பது கடன் சார்ந்த முதலீட்டு கருவி. இதில் முதலீட்டாளர் தனது பணத்தை ஒரு நிறுவனம் அல்லது அரசுக்கு கடனாக வழங்குகிறார். அதற்கு ஈடாக குறிப்பிட்ட வட்டி கிடைக்கும். பத்திரத்தின் முதிர்வுக் காலம் முடிந்ததும் அசல் தொகை திருப்பித் தரப்படும். பத்திரம் வெளியிட்ட பிறகு சந்தையில் புழக்கத்துக்கு வரவும் வாய்ப்பு உண்டு.
பத்திரத்தின் வட்டி விகிதம் (Coupon Rate) மட்டுமே முதலீட்டாளரின் உண்மையான வருமானத்தை நிர்ணயிப்பதில்லை. உதாரணமாக, ரூ.100 முகமதிப்புள்ள ஒரு பத்திரத்தின் கூப்பன் வட்டி 8% என்றால் ஆண்டுக்கு ரூ.8 கிடைக்கும். அந்தப் பத்திரத்தை சந்தையில் ரூ.99-க்கு வாங்கினால், தற்போதைய வருவாய் விகிதம் 8.08 சதவீதமாகும்.
அதையே ரூ.101-க்கு வாங்கினால், தற்போதைய வருவாய் 7.92 சதவீதமாகக் குறையும். மேலும், பத்திரத்தை முதிர்வு வரை வைத்திருந்தால் கிடைக்கக்
கூடியது மொத்த ஆண்டு வருமானம் Yield to Maturity (YTM) எனப்படுகிறது.
இதில் வட்டி வருமானத்துடன், வாங்கிய விலைக்கும் முதிர்வு மதிப்புக்கும் இடையிலான லாபம் அல்லது இழப்பும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
எல்லாம் பாதுகாப்பானவை அல்ல
பத்திரத்தின் பாதுகாப்பு, அதை வெளியிடும் நிறுவனம் அல்லது அமைப்பைப் பொறுத்து மாறுபடும். மத்திய அரசு வெளியிடும் அரசுப் பத்திரங்கள் மற்றும் டிரஷரி பில்கள் ஒப்பீட்டளவில் அதிக பாதுகாப்பு கொண்டவை.
மாநில வளர்ச்சிக் கடன்கள் மற்றும் சில உயர்தர பொதுத்துறை நிறுவனப் பத்திரங்களும் முதலீட்டாளர்களால் பாதுகாப்பான வாய்ப்புகளாகக் கருதப்படுகின்றன. ஆனால், தனியார் நிறுவனங்கள் வெளியிடும் நிறுவனப் பத்திரங்களில் முதலீடு செய்யும்போது கூடுதல் கவனம் தேவை. அந்த நிறுவனத்தின் நிதிநிலை, கடனை திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் தரமதிப்பீடு ஆகியவற்றைப் பரிசீலிக்க வேண்டும்.