

பொருளாதாரமும் நிறுவனங்களும் அவ்வப்போது பலவிதமான மேக்ரோ பொருளாதார மற்றும் வெளிப்புற சவால்களை எதிர்கொள்வது இயல்பானது. தற்போதைய சூழலில் அமெரிக்கா போன்ற நாடுகளின் அதிக வரி விதிப்பு, புவிசார் அரசியல் பதற்றம், நுகர்வோர் தேவை, நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சிப் பாதை, உள்நாட்டு - சர்வதேச மத்திய வங்கிகளின் நிதிசார் நடவடிக்கை, செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தி வரும் தாக்கம் மற்றும் விநியோகச் சங்கிலி மாற்றங்கள் என பல்வேறு சவால்கள் இந்திய சந்தையில் நிலவுகின்றன.
இத்தகைய சவால்கள் சில நேரங்களில் குறிப்பிட்ட துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு ‘சிறப்புச் சூழல்களை’ இயற்கையாகவே உருவாக்குகின்றன. இது முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்வதற்கான ஒரு நல்வாய்ப்பாக மாறிவிடுகிறது.
இத்தகைய இக்கட்டான சூழலில், குறிப்பிட்ட சில நிகழ்வுகளுக்கு சந்தை காட்டும் அதிகப்படியான எதிர்வினையால் பங்குகளின் விலை கடுமையாக வீழ்ச்சியடையும். இது அந்தத் துறை பங்குகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது.