

செயற்கை நுண்ணறிவின் (AI) அபரிமிதமான வளர்ச்சி, பங்குச் சந்தைகளின் ஏற்றம் மற்றும் சாதகமான நிதிக் கொள்கைகள் காரணமாக, இந்த ஆண்டு போர்ப்ஸ் வெளியிட்டுள்ள பில்லியனர் (உலக கோடீஸ்வரர்கள்) பட்டியலில் சாதனை அளவாக 3,428 தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் வாரிசுகள் இடம் பிடித்துள்ளனர்.
இது 2025-ம் ஆண்டை விட 400 பேர் அதிகம். உலகளாவிய பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு சாதனை அளவை எட்டியுள்ள தருணத்தில் இந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. 1 பில்லியன் டாலருக்கு மேல் (ரூ.9,200 கோடி) சொத்து மதிப்பு கொண்டவர்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
இதில் டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரி 839 பில்லியன் டாலருடன் (ரூ.77.64 லட்சம் கோடி) முதலிடத்தில் உள்ளார். கூகுள் லாரி பேஜ் (257 பில்லியன் டாலர்), கூகுள் செர்கே பிரின் (235 பில்லியன் டாலர்), அமெசான் ஜெப் பிஸோஸ் (224 பில்லியன் டாலர்), பேஸ்புக் மார்க சூகர்பர்க் (222 பில்லியன் டாலர்) ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர்.
பட்டியலில் உள்ளவர்களின் மொத்த சொத்து மதிப்பு 20.1 டிரில்லியன் டாலராக (ரூ.1,860 லட்சம் கோடி) உள்ளது. இது 2025-ஐ விட 4 டிரில்லியன் டாலர் அதிகமாகும்.
அமெரிக்கா 989 பெரும் கோடீஸ்வரர்களுடன் முதலிடத்தில் உள்ளது (உலகின் முதல் 20 பணக்காரர்களில் 15 பேர் அமெரிக்கர்கள்). சீனா (ஹாங்காங் உட்பட) 610 கோடீஸ்வரர்களுடன் அடுத்த இடத்திலும், இந்தியா 229 கோடீஸ்வரர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இந்தியர்களான ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி ($99.7 பில்லியன்) 21-வது இடத்திலும், கவுதம் அதானி ($63.8 பில்லியன்) 31-வது இடத்திலும், சாவித்ரி ஜிண்டால் (%39.1 பில்லியன்) 51-வது இடத்திலும், லட்சுமி மிட்டல் (%31 பில்லியன்) 70-வது இடத்திலும், சிவ நாடார் ($30.9 பில்லியன்) 71-வது இடத்திலும், சைரஸ் பூனாவாலா ($27 பில்லியன்) 95-வது இடத்திலும், திலிப் சங்வி ($25.6 பில்லியன்) 100-வது இடத்திலும் உள்ளனர்.