

உலக நாடுகளே வியக்கும் வகையில், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. குறிப்பாக யுபிஐ பரிவர்த்தனை புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு புறம் இருந்தாலும், டிஜிட்டல் வழி மோசடிகளும் அதற்கு நிகராக அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளில், சைபர் மோசடி, ஏமாற்றுதல் தொடர்பான குற்றங்களால் இந்தியர்கள் ரூ.52,976 கோடியை இழந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளி விவரம் கூறுகிறது. நிதி சார்ந்த குற்றங்கள் இந்தியாவில் கணிசமான அளவுக்கு அதிகரித்து வருவதாக இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் (I4C-Indian Cyber Crime Coordination Centre) புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2020-ல் சைபர் மோசடி புகார் 1,27,746 ஆகவும் நிதி இழப்பு ரூ.8.56 கோடியாகவும் இருந்தது. இது 2024-ல் கிட்டத்தட்ட பல நூறு மடங்கு அதிகரித்து ₹22,850 கோடி என்ற உச்சத்தை அடைந்திருக்கிறது.
2025-லும் கவலைக்குரிய வகையில் இழப்பு ₹19,813 கோடியாக இருந்தது. 21.77 லட்சத்துக்கும் மேற்பட்ட மோசடிப் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்து வரும் வேளையில் விழிப்புணர்வு நிச்சயமாக பின்தங்கியுள்ளது என்பதை இந்த மோசடிகள் சுட்டிக்காட்டுகின்றன.
மகாராஷ்டிரா முதலிடம்: இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் இந்த மோசடிகளால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 2,83,320 புகார்கள் பதிவாகியுள்ளன, இழப்பு ரூ.3,203 கோடி. இதற்கு அடுத்தபடியாக கர்நாடகா (ரூ.2,413 கோடி), தமிழ்நாடு (ரூ.1,897 கோடி), உத்தரப் பிரதேசம் (ரூ.1,443 கோடி), தெலங்கானா (ரூ.1,372 கோடி) ஆகிய மாநிலங்கள் வருகின்றன.
இந்த ஐந்து மாநிலங்கள் மட்டுமே நாட்டின் மொத்த இழப்பில் 50 சதவீதத்துக்கும் மேல் பங்கு வகிக்கின்றன. இந்த மாநிலங்களில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதோடு, டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் பெருமளவில் நடைபெறுகின்றன. இணையப் பயன்பாடும் மிக அதிகம் என்பதால், மோசடி செய்பவர்கள் தங்கள் மோசடிக் செயல்களுக்கு இந்த மாநிலங்களையே குறி வைக்கின்றனர்.