

முதலீட்டாளர்கள் பெரும்பாலும் அதிக லாபம் தரக்கூடிய பங்குகள், சிறந்த செயல்திறன் கொண்ட பரஸ்பர நிதிகள் அல்லது மிகவும் பிரபலமான முதலீட்டுத் திட்டங்களைத் தேடுவதற்கே அதிக நேரம் செலவிடுகிறார்கள்.
இருப்பினும், நீண்டகாலச் செல்வ உருவாக்கம் என்பது, நாம் தேர்ந்தெடுக்கும் குறிப்பிட்ட பங்குகளைவிட, பல்வேறு வகையான சொத்து வகைகளில் தலீட்டை எவ்வாறு பிரித்து ஒதுக்குகிறோம் என்பதைப் பொறுத்தே அமைகிறது.
2008 முதல் 2025 வரையிலான பங்குகள், பத்திரங்கள் மற்றும் தங்கம் ஆகியவற்றின் வருடாந்திர வருவாயை கவனித்தால், எந்தவொரு குறிப்பிட்ட சொத்து வகையும் தொடர்ந்து ஆண்டுதோறும் முதலிடத்தைப் பிடிப்பதில்லை என்பதை புரிந்து கொள்ளலாம். மேலும், அடுத்த ஆண்டு எந்த சொத்து வகை மிகச்சிறந்த வருவாயைத் தரும் என்பதைக் கணிப்பது சாத்தியமற்றது.
உதாரணமாக, 2008-ல், பிஎஸ்இ சென்செக்ஸ் 52.4% சரிந்தது. அதேநேரம், கிரிசில் காம்போசிட் பாண்ட் ஃபண்ட் குறியீடு 8.8%, தங்கம் 26.1% லாபத்தை அளித்தன. தங்கள் முதலீடு முழுவதையும் பங்குகளிலேயே குவித்த முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தனர்.
அதே வேளையில், பத்திரங்கள் மற்றும் தங்கத்திலும் முதலீடு செய்து பன்முகப்படுத்திய முதலீட்டாளர்கள் பயனடைந்தனர். இதேபோல 2011-லும் பங்குகள் 24.6% சரிந்தன.