

இந்தியக் குடும்பங்களில் தங்கமானது உணர்வுப்பூர்வமான, கலாச்சார, நிதிசார் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இது வெறும் ஆபரணமாக மட்டுமல்லாமல், நம்பகமான நிதிப் பாதுகாப்பு அரணாகவும் விளங்குகிறது.
இந்தியக் குடும்பங்கள், கோயில்கள் உள்பட பல மத அமைப்புகளிடம் மொத்தம் சுமார் 30,000 டன் தங்கம் முடங்கிக் கிடப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.145 லட்சம் கோடி.
காலம் காலமாக இவ்வளவு தங்கம் வீடுகளிலும் வங்கிக் லாக்கர்களிலும் முடங்கிக் கிடந்ததே தவிர, பொருளாதாரத்துக்குப் பெரிய அளவில் பங்களிக்கவில்லை. இதை பொருளாதாரத்தோடு இணைப்பதற்காக, மத்திய அரசு ‘தங்க பணமாக்கல் திட்டத்தை’ (Gold Monetisation Scheme - GMS) அறிமுகப்படுத்தியது.
பயன்பாடின்றி முடங்கிக் கிடக்கும் தங்கத்தைத் திரட்டும் ஆரம்பகட்ட முயற்சி 1999-ல் ‘தங்க வைப்புத் திட்டம்’ மூலம் தொடங்கியது. இருப்பினும், நிபந்தனை கடுமையாக இருந்ததால் மக்களிடையே போதிய வரவேற்பைப் பெறவில்லை.
குறைந்தபட்சம் 500 கிராம் தங்கத்தை வைப்பாகச் செலுத்த வேண்டியிருந்தது — இதனால் நடுத்தர குடும்பங்கள் இத்திட்டத்தில் இணைய முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, சில திருத்தங்களுடன் 2015-ல் மேம்படுத்தப்பட்ட ‘தங்கத்தைப் பணமாக்கும் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி குறைந்தபட்ச வரம்பு 500 கிராமிலிருந்து வெறும் 30 கிராமாக குறைக்கப்பட்டது. தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வட்டியை வருமானமாக பெறலாம்.
ஆனாலும், குடும்ப ஆபரணங்களை உருக்குவது குறித்த தயக்கம் (நம்பிக்கையின்மை), சிக்கலான பரிசோதனை நடைமுறைகள், போதுமான சேகரிப்பு மையங்கள் இல்லாமை போன்ற காரணங்களால் இதன் செயல்பாடு மந்தமாகவே இருந்தது.
இந்த சூழலில் கடந்த ஆண்டில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதையடுத்து, மேற்கு ஆசியப் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்தது.
இந்த இரண்டு காரணங்களால் அந்நியச் செலாவணி கையிருப்பு வேகமாக சரிந்தது. நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்தது. இதனால் தங்கம் வாங்குவதை குறைத்துக் கொள்ளுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.