

தற்போதைய உலகளாவிய சூழலில், எரிசக்தி பாதுகாப்பு என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் உலக நாடுகளின் எரிசக்தி விநியோகச் சங்கிலியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே சுமார் 15 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் போர் காரணமாக, எரிவாயு விநியோகத்தில் சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்தியாவில் சமையலுக்கு எல்பிஜி சிலிண்டர் மற்றும் குழாய் வழி பிஎன்ஜி என இரண்டு வகையான எரிவாயுகள் பயன்படுத்தப்படுகின்றன.
சுமார் 33 கோடிக்கும் அதிகமான மக்கள் எல்பிஜியை நம்பியுள்ளனர். இதில் 90 சதவீதம் வீட்டு சமையலுக்கே பயன்படுகிறது. நாட்டின் மொத்த எரிவாயு நுகர்வு நாளொன்றுக்கு சுமார் 19 கோடி கன மீட்டர் ஆக உள்ளது. எல்பிஜி தேவையில் 65 முதல் 67% வரை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.
குறிப்பாக, இந்தியாவின் 90% எரிவாயு இறக்குமதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது என்பது கவனிக்க வேண்டிய விஷயம். மேற்கு ஆசியாவில் நிலவும் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சரக்கு கப்பல் போக்குவரத்து முடங்கி உள்ளது.
இதனால் எரிவாயு விநியோகஸ்தர்கள் 'Force Majeure' (தவிர்க்க முடியாத சூழல்) என்ற ஒப்பந்த விதியைப் பயன்படுத்தி, விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர். இதன் மூலம் போர் அல்லது இயற்கைப் பேரிடர் போன்ற அசாதாரணமான சூழ்நிலைகளில், ஒரு நிறுவனம் தங்களால் ஒப்பந்தப்படி எரிவாயுவை விநியோகிக்க முடியாது என்பதை அறிவிக்க முடியும்.
ரூ.5.7 லட்சம் கோடி வருவாய்
இதன் விளைவாக மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் எரிவாயு விநியோகம் குறைந்துள்ளது. இது உணவகத் துறையை வெகுவாகப் பாதித்துள்ளது.