

மனிதவள மற்றும் பணியாளர் தீர்வுகள் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது தமிழ்நாட்டைச் சேர்ந்த சிஐஇஎல் ஹெச்ஆர் (CIEL HR Group) நிறுவனம். நாட்டின் மனிதவளத் துறை முன்னோடியான ‘மாஃபா’ க. பாண்டியராஜனின் தொலைநோக்குப் பார்வையில் உருவான இந்நிறுவனம், நவீன தொழில்நுட்பத்தையும் தரவு பகுப்பாய்வையும் பயன்படுத்தி, தனியார் நிறுவனங்களின் மனிதவளத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது.
தனியார் நிறுவனங்களுக்கு தகுதியான பணியாளர்களைத் தேடித் தருவதோடு மட்டுமல்லாமல், பல்வேறுபட்ட பணியாளர் சேவைகளையும் நவீன முறையில் வழங்கி வருகிறது. தற்போது நாட்டின் 42 முக்கிய நகரங்களில் 83 அலுவலகங்கள் மற்றும் 1,480-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் இயங்கி வரும் இந்நிறுவனம், பல்வேறு தொழில் துறைகளைச் சேர்ந்த 7,000-க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவை புரிந்து வருகிறது.
சென்னையை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் சிஐஇஎல் ஹெச்ஆர், மனிதவள சேவைகளில் நவீன தொழில்நுட்பத்தையும் செயற்கை நுண்ணறிவையும் (ஏஐ) பல்வேறு வழிகளில் பயன்படுத்தி வருகிறது. இதன்மூலம் தனது செயல்பாட்டுத் திறனை பெருமளவில் உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து சிஐஇஎல் ஹெச்ஆர் செயல் தலைவர் ‘மாஃபா’ க.பாண்டியராஜன் ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த நேர்காணல். மனிதவள மேம்பாட்டுத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம். இதனால் எங்கள் நிறுவனம் வேகமாக வளர்ந்து வருகிறது.
சிஐஇஎல் ஹெச்ஆர் நிறுவனத்தின் சேவைகளை மேலும் வலுப்படுத்தவும், நவீனமயமாக்கவும் ‘பீப்புள் மெட்ரிக்ஸ்’ (People Metrics) மற்றும் ‘கோர்ஸ்பிளே’ (Courseplay) ஆகிய இரண்டு முக்கியப் பிரிவுகள் பெரிதும் உதவுகின்றன. இதில் பீப்புள் மெட்ரிக்ஸ் என்பது இந்நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஒரு திறன் மதிப்பீட்டு பிரிவு ஆகும்.
இது நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள் மற்றும் வேலைக்கு வருபவர்களின் தலைமைத்துவப் பண்புகள் மற்றும் திறமைகளை அறிவியல் பூர்வமாக மதிப்பிட்டு, சரியான திறமையாளர்களைத் தேர்வு செய்ய உதவுகிறது. கோர்ஸ்பிளே என்பது ஏஐ தொழில்நுட்பம் கொண்ட ஒரு கற்றல் மேலாண்மை மற்றும் பணியாளர் வளர்ச்சித் தளமாகும்.
இது நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கு இணையவழி பயிற்சிகளை வழங்குவதோடு, அவர்களின் திறன் இடைவெளியைக் கண்டறிந்து மேம்படுத்தவும், செயல்திறனைக் கண்காணிக்கவும் ஒரு மென்பொருள் கருவியாகச் செயல்படுகிறது.