திடீர் நிதி சிக்கல்களை சமாளிக்க பொருளாதார நிலைத்தன்மை நிதியம்
அணு ஆயுதத்தை உற்பத்தி செய்வதாகக் கூறி, ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் தொடுத்தன. இது மேற்கு ஆசியா முழுவதும் பரவி உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து முடங்கி உள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலையும் வேகமாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், ‘பொருளாதார நிலைப்படுத்தல் நிதியத்தை’ (Economic Stabilisation Fund) மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் புவிசார் அரசியல் அபாயங்களிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதுதான் இதன் நோக்கம்.
இஎஸ்எப் (ESF) என்பது மத்திய அரசால் உருவாக்கப்படவுள்ள ஒரு சிறப்பு சேமிப்பு நிதியாகும். உலகளாவிய நெருக்கடிகள், விநியோக தடைகள், அல்லது திடீர் விலை உயர்வு போன்ற எதிர்பாராத பொருளாதார அதிர்வுகளை சமாளிக்க இது ஒரு நிதி பாதுகாப்பு வளையமாக (Financial Buffer) செயல்படும்.
* இந்த நிதியின் மொத்த அளவு ரூ.1 லட்சம் கோடி.
* ஆரம்பத்தில் ரூ.57,000 கோடி கூடுதல் பட்ஜெட்டின் மூலம் ஒதுக்கப்படும்.
* மீதமுள்ள தொகை அமைச்சகங்களின் சேமிப்பு மற்றும் மறுவழங்கல்களால் திரட்டப்படும்.
* இந்த நிதியை நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறை (DEA) நிர்வகிக்கும்.
