

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என்ற அடிப்படைத் தேவைகளோடு இன்னும் பலவும் காலப்போக்கில் சேர்ந்துவிட்டன. அவற்றில் ஒன்று இன்டர்நெட் எனும் இணைய சேவை என்றால் நம்ப முடிகிறதா? ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது மட்டுமல்ல. ‘இன்டர்நெட் இன்றி அசையாது பலவும்’.
இந்தியாவில் மொத்தம் 104 கோடி இணைய இணைப்புகள் இருக்கின்றன. வயர்லைன் டெலிபோன் இணைப்புகள் சுமார் 4.9 கோடி மட்டுமே. செல்போன்கள், கணினிகள் மட்டுமல்ல. செய்தி மற்றும் பிற ஊடகங்கள், விமானங்கள், கப்பல்கள், ரயில்கள், வங்கிகள், கல்வி நிறுவனங்கள், பங்குச்சந்தைகள், பல தொழிற்சாலைகள், அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என அனைத்தும் இணையத்தை நம்பி இருக்கின்றன. இணைய சேவை தடைப்பட்டால், அவையெல்லாம் தடுமாறிப் போகும்.
இணையத்தின் மூலமாக தேவைப்படுபவர்கள் கேட்பது அனைத்தும், அவற்றைத் தரக்கூடிய இடங்களுக்கு தகவல்களாகப் போய், அங்கிருந்து தகவல்களாக, கேட்டவருக்கு திரும்ப வருகின்றன. இப்படியாக ஒரு நாள் முழுக்க, ஆண்டு முழுக்க, பல லட்சம் கோடி இணையப் போக்குவரத்து நடக்கிறது.
மின்சாரம், உலோகக் கம்பிகள் வழியாக மட்டுமே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நகர முடியும். தண்ணீரும் திரவங்களும் குழாய்கள் மூலமாக பயணிக்கின்றன.
இணையத் தொடர்பு கிடைப்பது முக்கியமாக கீழ்க்கண்ட மூன்று வழிகளில்: நாடுகளுக்கிடையே கடலுக்கு அடியில் போடப்பட்டிருக்கிற கத்தை கத்தையான ஆப்டிகல் பைபர் கேபிள் மூலமாக; அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கும் டவர்களுக்கும் தரைக்கு அடியில் புதைக்கப்பட்ட பைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலமாக; செயற்கைக்கோள்கள் மூலம், ரேடியோ ஃப்ரீகுவன்சி அலைகளாக, விமானங்கள், கப்பல்கள், பிற செயற்கைக்கோள்கள் தரை அலுவலகங்கள் டவர்களுக்கு.
இந்தியாவில் எப்படி?
இந்தியாவில் விமானங்கள் கப்பல்கள் தவிர, மற்றவற்றுக்கு செயற்கைக்கோள் மூலம் இணைய வசதி கொடுக்கப்படுவதில்லை. இந்நிலையில், இந்தியாவில் அத்தகைய செயற்கைக் கோள் மூலம் இணைய சேவையை வழங்குவதற்கு Starlink, Eutelsat OneWeb மற்றும் Jio Satellite Communications ஆகிய 3 நிறுவனங்கள் அனுமதி கோரி விண்ணப்பித்திருக்கின்றன. மூன்று நிறுவனங்களுக்கும் இன்னும் இறுதி ‘செக்யூரிட்டி கிளியரன்ஸ்’ வழங்கப்படவில்லை. நிலுவையில் இருக்கிறது.
எலான் மஸ்க் ஆதங்கம்
‘இந்தியாவில் உள்ள சில மன்னர்கள் எங்களுக்கு அனுமதி கிடைப்பதை தடுத்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் மறைமுகமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியை பொதுவெளியில் குற்றம் சாட்டியிருக்கிறார். எலான் மஸ்க் உலகின் நம்பர் ஒன் பணக்காரர்.