

கடந்த அக்டோபரில் வெளியான சர்வதேச நாணய நிதியத்தின் உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கை, சர்வதேச அளவில் அரசுகளின் கடன் 110.9 டிரில்லியன் டாலராக உயரும் என்று மதிப்பிட்டுள்ளது. வளரும் நாடுகள் மட்டுமல்லாமல் பொருளாதார வலிமையுடன் விளங்கும் வளர்ந்த நாடுகளும் கடன் நெருக்கடியில் சிக்கி உள்ளன.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனங்கள், வளர்ந்த நாடுகள் உலக நாடுகளுக்கு கடன் வழங்குகின்றன. இதுதவிர, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டு அரசுகள் பத்திரங்களை வெளியிட்டு கடன் பெறுகின்றன. இந்த பத்திரங்களை வங்கிகள், நிதி மற்றும் வணிக நிறுவனங்கள், அரசுகள் வாங்குகின்றன.
பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க அரசுகள் கடன் வாங்குகின்றன. உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதார மேம்பாடு, வளர்ச்சித் திட்டங்கள், இயற்கைப் பேரிடர்கள் ஆகியவற்றிற்காக கடன்கள் வாங்கப்படுகின்றன. முதலீடுகளுக்காக தனியார் துறையினர் கடன் வாங்குகின்றனர்.
உலக நாடுகளின் மொத்த ஜிடிபியில் அரசுகளின் கடன் விகிதம் 94.7% ஆகும். மேலும் 23 நாடுகள் தங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட (ஜிடிபி) கூடுதலாக கடன் வாங்கி உள்ளதாகவும், சில நாடுகள் கடனுக்கு செலுத்துகின்ற வட்டி, அந்த நாடுகள் கல்வி, உடல்நலனுக்காக செலவிடுவதைவிட அதிகமாக இருப்பதாக இவ்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது
ஒரு நாடு எவ்வளவு கடன் வாங்கலாம் என்பதற்கு வரம்பு இல்லையென்றாலும், ஜிடிபியின் அளவில் 60% வரை கடன் வாங்குவது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
கடன் - ஜிடிபி விகிதம் என்பது ஒரு அரசின் மொத்த கடனையும் அதன் ஜிடிபியுடன் ஒப்பிடுவதாகும். பொருளாதார வலிமையுடன் விளங்கும் அமெரிக்கா மிகப்பெரும் கடனாளியாக உள்ளது. சர்வதேச அரசுகளின் கடனில் 34.5% அமெரிக்காவின் பங்காகும். பெருகிவரும் அரசாங்க செலவுகள், ராணுவம், சமூகப் பாதுகாப்பு செலவுகள், புவிசார் அரசியல் அழுத்தங்கள் காரணமாக அமெரிக்காவின் கடன் அதிகரித்து வருகிறது.