

அமெரிக்காவில் பல லட்சம் சம்பளத்தில் பார்த்து வந்த ஐடி வேலையை உதறிவிட்டு, இந்தியாவில் இயற்கை விவசாயத்தில் களம் இறங்கி ஆண்டுக்கு ரூ.600 கோடி வருவாய் ஈட்டி மென்பொறியாளர் சாதனை படைத்துள்ளார்.
பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர் சசி குமார், இவர் விப்ரோ’ நிறுவனத்தில் 12 ஆண்டுகள் பணியாற்றினார். தொழில்முறையாக அமெரிக்காவில் தங்கிப் பணியாற்றிய அவர், விவசாயத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் தனது கார்ப்பரேட் வேலையைத் துறந்து இந்தியா திரும்பினார்.
பாரம்பரிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அவரது தந்தை, தான் பட்ட கஷ்டங்களை மகன் படக் கூடாது என்ற நோக்கில் சசி குமாரின் இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் சுமார் 8 ஆண்டுகள் தனது மகனுடன் பேசாமல் இருந்தார். வேலையை விட்டு விலகிய சசி குமார் விவசாயத்தில் கள மிறங்கி அக்.ஷய கல்பா என்ற இயற்கை பால் மற்றும் விவசாய உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கினார்.
தொடக்கம் அவருக்கு எளிதாக அமையவில்லை. முதல் 9 ஆண்டுகளில் சுமார் 6 முறை நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து மூடும் நிலைக்குச் சென்றது.
அந்தச் சமயத்தில், சசி குமாரின் மனைவி தனது சேமிப்புப் பணமான ரூ.30 லட்சத்தை வழங்கி நிறுவனத்தை மீட்டெடுக்க உதவினார். தற்போது இந்த நிறுவனம் மாதம் ரூ.60 கோடி என ஆண்டுக்கு சுமார் ரூ.600 கோடி வருவாய் ஈட்டும் அளவுக்குப் பிரம்மாண்ட வளர்ச்சி அடைந்துள்ளது.
‘அக் ஷயகல்பா’ நிறுவனத்துடன் தற்போது 2,800 விவசாயிகள் இணைந்துள்ளனர். இந்நிறுவனம் மூலம் ஒவ்வொரு விவசாயக் குடும்பமும் மாதம் சராசரியாக ரூ.1.28 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு மட்டும் ரூ.480 கோடி வரை நிறுவனம் வழங்குகிறது.
சசி குமாரின் இந்த வெற்றிக் கதையைச் சமூக வலைதளத்தில் எக்ஸ் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ள நிலையில், அதைப் பல ஆயிரக்கணக்கானோர் பார்த்துப் பாராட்டி வருகின்றனர்.
தமிழ்நாடு மற்றும் ஆந்திராவிலும் இத்தகைய அமைப்பைக் கொண்டு வர வேண்டும் என்றும், அவர்களது தயாரிப்புகள் தரமாக உள்ளது என்றும் சமூக வலைதளவாசிகளும் வாடிக்கையாளர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
- rajanpalanikumar.a@hindutamil.co.in