

செய்யறிவு என்றால் சாட் பாட்கள் (chat bot) மட்டுமே அல்ல. அவற்றுக்குப் பல்வேறு முகங்கள் உள்ளன. பல்வேறு நாமங்களும். டிஜிட்டல் உலகில் ஃபார்ம் ஃபேக்டர் (Form Factor) என்றொரு கருத்து உண்டு. எந்தவொரு நுட்பமும் மிகப்பெரிய வெற்றியடைய உதவுவது இந்த ஃபார்ம் ஃபேக்டர்தான்.
கூகுள் வருவதற்கு முன்பே தேடுபொறிகள் இருந்தன. ஆனால் அவற்றின் வடிவம் அனைவரும் பயன்படுத்தும் தரத்தில் இல்லை. கூகுள் வெற்றிபெறக் காரணம் அதன் எளிமை. ஒரே ஒரு டெக்ஸ்ட் பாக்ஸ். அதில் என்ன வேண்டுமானாலும் உள்ளீடு செய்யலாம். இதே கதைதான் சாட்ஜிபிடி விஷயத்திலும். அதற்கு முன்னும் செய்யறிவுகள் இருந்தன. ஆனால் அனைவரையும் கவரும் வடிவில் இல்லை.
சாட்ஜிபிடி ஓர் எளிய இன்டர்ஃபேஸுடன் வந்தது. சக மனிதர்களுடன் பேசுவது போலவே அவற்றுடன் உரையாடலாம். இதற்கெனத் தனிப்பட்ட பயிற்சிகள் எதுவும் தேவைப்படவில்லை. செய்யறிவின் ‘சாட்’ முகம் வசீகரமானது. அறிவியலாளர்களிடம் ஒரு குணம் உண்டு. ‘இது போதும்’ என்று ஒருபோதும் அவர்கள் திருப்தியடைந்து விடுவதில்லை.
‘அடுத்து என்ன?’ இக்கேள்விதான் அறிவியலின் ஆதாரம். சாட் பாட் நன்று. அடுத்து என்ன? ஏஜென்ட் என்றொரு வடிவம். சாட்பாட் என்பது வாய்ச்சொல் வீரன். ஏஜென்ட்கள் செயல் வீரர்கள். நாம் இடும் பணியைச் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவை. ஓர் உதாரணம். நீங்கள் டெல்லிக்குச் செல்ல வேண்டும். அதற்கான தகவல்களைச் சேகரிக்க சாட் பாட்டைப் பயன்படுத்தலாம். தகவல்களை மட்டுமே சாட் பாட்கள் தரும். ஏஜென்ட் தகவலுடன் நின்றுவிடாது. பயணத்துக்கான டிக்கெட்டை முன்பதிவு செய் என்றால் செய்யும். தங்குவதற்கான ஓட்டல் அறையைத் தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்யும். மொத்தத்தில் அவை நமக்கொரு பணியாள் போல.
இதற்கு மேல் என்ன வேண்டும் என்று தோன்றுகிறதல்லவா? ஆனால் அறிவியல் இத்துடன் நின்றுவிடுவதில்லை. அடுத்து என்ன? அணியும் நுட்பம். சாட் இன்டர்ஃபேஸ் ஆனாலும் சரி, ஏஜென்ட் ஆனாலும் சரி, அவை ‘திரைப் பறவைகள்’. நமக்கும் அவற்றுக்கும் இடையே திரை உள்ளது. இத்திரையை விட்டு விடுதலையானால் என்ன என்று சிந்தித்ததன் விளைவுதான் ‘அணியும் செய்யறிவுகள்’. Wearable AI. பல்வேறு விதமான அணியும் நுட்பங்கள் உள்ளன. வாட்ச்கள் தொடங்கி கண்ணாடிகள் வரை. செய்யறிவுப் புரட்சி தொடங்கும் முன்னரே அணியும் நுட்பங்கள் வந்துவிட்டன. செய்யறிவு வந்தபின்னர் இவற்றின் ஆற்றல் பன்மடங்கு பெருகியுள்ளது. ஸ்மார்ட் வாட்ச்சில் செய்ய இயலும் பணிகள் என்று மிகச் சில மட்டுமே முன்பு இருந்தன. தற்போது இது நீண்டதொரு பட்டியலாக வளர்ந்துள்ளது.