

செய்யறிவு ஓர் அபயக் கரம். அதுவே அபாயக் கரமாக மாறும் வாய்ப்புகளும் உள்ளன. இது ஏதோ வாட்ஸ் ஆப் ஃபார்வேர்ட்களில் உலாவரும் புரளி இல்லை. துறைசார்ந்த விற்பன்னர்களே இவ்வாறு பேசத்தொடங்கியுள்ளனர்.
செய்யறிவு அறிஞர்களில் இருவேறு அணியினர் உள்ளனர். இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் செய்யறிவு அபயக் கரமாக மட்டுமே இருக்கும் என்று ஒருசாரார் நம்புகின்றனர். அவை என்றைக்குமே மனித குலத்தின் கைமீறிச் சென்றுவிடாது.
இதை முற்றிலும் மறுக்கிறது வேறொரு தரப்பு. செய்யறிவு மிகவிரைவில் நம் கைமீறிச் சென்றுவிடும் என்கின்றனர். அவ்வாறு நிகழாமல் இருக்க வேண்டுமெனில் நாம் அதீத எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். முதலில் செய்யறிவு நம் கைமீறிச் செல்வது என்றால் என்னவென்று புரிந்துகொள்வோம்.
கணினி ஒரு சிறந்த பணியாள். நாம் இடும் ஆணைகளை எந்தவொரு எதிர்க்கேள்வியும் கேட்காமல் செயல்படுத்தும். இவ்வாறு இருக்கும்வரை நமக்கு நல்லது. கணினியின் மற்றொரு குணாதிசயம் நாம் சொல்லாத எதையும் செய்யாது.
இவை இரண்டையும் கேள்விக்குறியாக்குகின்றன செய்யறிவு மாதிரிகள். நாம் சொன்னதைச் சொன்ன வண்ணம் செய்யாமல் இருப்பது, சொல்லாததைச் செய்வது. இன்னும் கொஞ்சம் எளிமையாகப் புரிந்துகொள்வோம்.