

தொழில்நுட்பம் வாழ்வை மாற்றவல்லது. இது அனைவருக்குமே பொருந்தும். ஆயினும் மாற்றுத் திறனாளிகளுக்குக் கூடுதலாகவே பொருந்தும். மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் எண்ணற்றவை. ஒவ்வொரு சூழலுமே ஒருவிதமான சவால்.
ஒரு காலக்கட்டம்வரை உதவிக்கென இவர்கள் உடனிருக்கும் மனிதர்களை மட்டுமே நாட வேண்டியிருந்தது. அவ்வாறு செய்வதில் ஒரு சிக்கல். உதவுபவரின் கருணையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நிலை.
பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாழ்விலிருந்து ஓர் உதாரணம். அன்றாடம் செய்தித்தாள் வாசிப்பது பலருக்கும் எளிய செயல். ஆனால் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு அவ்வாறல்ல. இதற்குப் பிரத்தியேகமான உதவிகள் தேவைப்பட்டன. முன்பெல்லாம் எவரேனும் ஒருவர் வாசித்துக்காட்ட வேண்டும். அதன் பின்னர் டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்தது. எவர் துணையும் இல்லாமல் அவர்களால் செய்தித்தாள்களை வாசிக்க முடிந்தது.
பிறருக்கெல்லாம் தொழில்நுட்பம் என்பது ஒரு கூடுதல் வசதி. ஆனால் மாற்றுத் திறனாளிகளைப் பொறுத்தவரை அது வாழ்வை மாற்றும் ஒன்று. முன்பு எது இயலாது என்று இருந்ததோ அதையே மிக எளிதான ஒன்றாக மாறச் செய்வது. தொழில்நுட்பம் போல மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது வேறு ஒன்றில்லை.
டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடங்கி வைத்ததை செய்யறிவுகள் அடுத்த படிநிலைக்கு இட்டுச்செல்கின்றன. புலன்கள் செய்ய வேண்டிய செயலை நுட்பம் செய்ய முற்படுகிறது. பார்வை மாற்றுத்திறனாளி ஒருவர் மின் புத்தகம் ஒன்றை வாசிக்கிறார். இதற்கென ஸ்க்ரீன் ரீடர் என்னும் சாஃப்ட்வேர்கள் உள்ளன. ஆனால் அவை பொதுவாக டெக்ஸ்ட்டை மட்டும் படிக்கும். இடையே படங்கள் எதுவும் வந்தால் அவற்றால் சரியாக வாசிக்க இயலாது.