

தானியங்கிக் கார்கள் வந்துவிட்டன. ஓட்டுநர் இல்லாமலேயே ஓடும் கார்கள் இவை. அப்படியான ஒரு காரில் இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நூறு கிலோமீட்டர்கள் வேகத்தில் வாகனம் விரைந்து கொண்டிருக்கிறது. சற்றும் எதிர்பாராமல் சாலையில் ஒரு மூதாட்டி. நேராகச் சென்றால் கார் அவர் மீது மோதிவிடும். வளைக்கலாம் என்றால் அருகே பள்ளம். இப்போது விநாடிக்கும் குறைந்த நேரத்தில் ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும்.
நேராகச் சென்றாலும் சிக்கல். வளைத்தால் ஆபத்து. என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டிய இடத்தில் ஒரு மனிதர் இல்லை. ஓர் அல்காரிதம். செய்யறிவு அம்முடிவை எடுக்க வேண்டும். இதுபோன்ற சூழல்களில் முடிவெடுப்பது எளிதல்ல. மனிதர்களுக்கே கூட எளிதல்ல. இவை சாலை விதிகள் மட்டும் சார்ந்து எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் அல்ல. ஒழுக்கம் சார்ந்து எடுக்கப்பட வேண்டிய முடிவு.
கார் ஓட்டுவது தான் என்றில்லை. பல்வேறு துறைகளிலும் இதுபோன்ற சூழல்கள் எழுகின்றன. ஒரு காலக்கட்டம் வரை கணினிகளுக்குத் தரப்பட்ட வேலைகள் மெக்கானிக்கலாக இருந்தன. செயல் முடிக்க ஒரு ஃபார்முலா இருக்கும். அதனை அப்படியே கடைப்பிடித்தால் போதும். செய்யறிவுப் பயன்பாடுகள் வளர வளர இந்நிலை வெகுவாக மாறியுள்ளது. இதன் ஊடாக ஒரு புதிய துறையே வளர்ந்து வருகிறது. அதனை ‘செய்யறிவு ஒழுக்கம்’ என்கின்றனர்.
நெறி சார்ந்த முடிவுகள் எடுக்கும் வல்லமையை எவ்வாறு செய்யறிவு மாடல்களுக்குக் கொடுப்பது என்று ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதன் அடிப்படை அம்சம் சார்புநிலை ஏற்படாமல் பார்த்துக்கொள்வது. இதனை பயாஸ் (bias) என்று அழைக்கின்றனர். பல்வேறு விதமான பயாஸ்கள் உள்ளன. பாலினம், மொழி, வயது எனப் பல்வேறு பரிமாணங்களில் சார்புநிலை நிகழலாம்.