

மனித குலத்தின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு எது? இக்கேள்வியை உங்கள் நண்பர்களிடம் கேட்டுப்பாருங்கள். சிலர் மின்சாரம் என்பர். கணினிகள், தடுப்பூசிகள், சக்கரம் என்று பல்வேறுவிதமான பதில்கள் வரும்.
இவை அனைத்திலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஐயமின்றி இவையாவும் சீரிய கண்டுபிடிப்புகள்தான். ஒவ்வொன்றுமே தன்னளவில் மனித குலத்தை இன்னும் கொஞ்சம் உயரே உந்தித்தள்ளியுள்ளது.
ஆயினும் இவை யாவற்றையும் விட உயரிய ஒன்றுள்ளது. அது மொழி. மனிதர்களைப் பிற உயிரினங்களிடமிருந்து வெகுவாக வேறுபடுத்தும் ஒன்று மொழி. மனித குலத்தின் ஒட்டுமொத்த அறிவுச் செல்வமும் மொழிகளிலேயே உள்ளது.
மொழியின்றி அறிவில்லை. மொழிகள் நம்முடைய தனிச்சொத்தாக மட்டுமே ஒரு கட்டம்வரை இருந்ததுள்ளன. பின்னர் இதற்கும் ஒரு போட்டி வந்தது. அது செய்யறிவு என்னும் வடிவில் வந்தது.
செய்யறிவின் மொழி அறிவு எத்தகையது? அவை எவ்வாறு கவிதைகள், கட்டுரைகள் எல்லாம் எழுதுகின்றன? தொழில்நுட்பத்தின் இடுக்குகளில் சிக்கிக்கொள்ளாமல் எளிய மொழியில் அறிமுகப்படுத்திக் கொள்வோம். முதலில் மனிதர்கள் எவ்வாறு மொழி கற்கின்றனர் என்று பார்ப்போம். பிறந்த குழந்தைக்கு இலக்கணத்தை எவரும் கற்பிப்பதில்லை. குழந்தைக்கு அறிமுகமாகும் ஒவ்வொரு சொல்லும் சொல் மட்டுமே அல்ல. அது ஓர் உணர்வு.
உதாரணமாக ‘அம்மா’ என்னும் சொல்லை எடுத்துக்கொள்ளுங்கள். குழந்தைக்கு அது வெறும் சொல்லல்ல. அதில் அன்பும், அன்னையின் கதகதப்பும் இணைந்தே இருக்கின்றன. ஒவ்வொரு சொல்லுமே இப்படித்தான்.