

இது தேர்தல் காலம். விரைவில் விரல் நுனியில் மை வைக்க இருக்கிறோம். ஆனால் இப்போதே நம் விரல் நுனிகளில் பொய் வைத்துக் கொண்டிருக்கிறது செயற்கை நுண்ணறிவு (ஏஐ). டீப்ஃபேக் எனப்படும் ஆழப்போலிகள் நம் காலத்தின் ஆகப்பெரிய பிரச்சினையாக உருமாறியுள்ளன.
ஏஐ என்பது ஒரு குட்டிச்சாத்தான். நாம் என்ன சொன்னாலும் செய்யும். அது நமக்குத் தந்திருக்கும் பரிசுகள் ஏராளம். அதே வேளையில் முன்னெப்போதும் இல்லாத இன்னல்களையும் தருவித்துள்ளது. அவற்றுள் ஒன்றுதான் இந்த டீப்ஃபேக்குகள்.
உண்மை என்னும் உடை உடுத்தி வந்திருக்கும் பொய்கள். சற்றும் ஐயம் கொள்ளச் செய்யாத தரத்தில் இருக்கும் அக்மார்க் போலிகள். அதே உருவம். அதே குரல். ஆனால் அவரா இப்படிப் பேசினார் என்று யோசிக்காமல் நம்பச் செய்யும் ஆற்றல்.
இவைதான் ஆழப்போலிகளின் பலம். முன்பெல்லாம் டீப்ஃபேக்குகள் பிரபலங்களை மட்டுமே மையப்படுத்தி வந்துகொண்டிருந்தன. ஆனால் தற்போது நம்மில் எவரை வேண்டுமானாலும் நகலெடுப்பது எளிதாகியுள்ளது. இதன் காரணமாக இவ்வகையிலான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
'அப்பா எனக்குக் கொஞ்சம் பணம் அனுப்புங்க?' என்றொரு ஆடியோ மெசேஜ் வருகிறது. அப்படியே அச்சு அசலாக உங்கள் பிள்ளையின் குரல். இதுபோன்ற இன்னல்களின்போது நாம் உணர்ச்சிவசப் பட்டுவிடுவோம். சற்றும் சிந்திக்காமல் பணம் அனுப்பிவிடும் வாய்ப்புகளே அதிகம்.