

சாட்ஜிபிடி வருவதற்கு முன்பே செய்யறிவு இருந்தது. பல்வேறு துறைகளிலும் அவை உதவி செய்துவந்தன. அவற்றுள் முதன்மையானது மின்வணிகம் (இ-காமர்ஸ்). அமேசான் செயலியைத் திறக்கிறீர்கள். உங்கள் நண்பரையும் திறக்கச் சொல்லுங்கள்.
இருவரின் திரைகளில் தோன்றும் முகப்புப் பக்கங்கள் வெவ்வேறாக இருக்கும். இதனை பெர்ஸ்னலைலேசன் என்கின்றனர். இது பன்னெடுங்காலமாக இருந்து வரும் ஒன்று. இதிலும் செய்யறிவுகளின் கைவண்ணம் உள்ளது.
ஒரு கடையில் ஒரு குறிப்பிட்ட விதத்தில் பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அவை உங்கள் தேவைக்கேற்ப வரிசையாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தால் எத்தனை வசதியாக இருக்கும்? இதைத்தான் மின்வணிகத் தளங்கள் செய்கின்றன. ஒவ்வொரு பயனரின் விருப்பத்துக் கேற்பக் கடையை அடுக்குகிறது ஏஐ.
முன்பெல்லாம் மின்வணிகத் தளங்களில் பொருள்களைத் தேடுவது மிகவும் சிக்கலாக இருந்தது. நாம் ஒன்றைத் தேடினால் அது சம்பந்தமில்லாத பல
வற்றையும் கொண்டுவந்து குவிக்கும். இன்றைய தேடல் பொறிகள் ஸ்மார்ட்டாகிவிட்டன.
நாம் சொல்ல வருவதைக் கச்சிதமாகப் புரிந்துகொள்கின்றன. எவ்வாறு நிகழ்கிறது இந்த மாயம்? நம் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனிப்பதுதான் சூட்சுமம். இன்ஸ்டாவில் நீங்கள் ஸ்வைப் செய்யும் வேகம் கூட ஒரு தகவல். நீங்கள் க்ளிக் செய்யவேண்டும் அல்லது தொடவேண்டும் என்று கூட அவசியமில்லை.