ஏன் திவாலானது கோ ஃபர்ஸ்ட்?

ஏன் திவாலானது கோ ஃபர்ஸ்ட்?
Updated on
2 min read

சில நாட்களுக்கு முன்பு இந்திய தனியார் விமான நிறுவனமான கோ ஃபர்ஸ்ட், தங்கள் நிறுவனம் கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாகக் கூறி, தாமாக முன்வந்து தேசிய நிறுவன தீர்ப்பாயத்தில் திவால் நடைமுறைக்கு விண்ணப்பித்தது.

இந்தியாவின் முதன்மை விமான நிறுவனங்களில் ஒன்றாக வலம்வந்த ஜெட் ஏர்வேஸ், நிதி நெருக்கடியால் 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது சேவையை முற்றிலும் நிறுத்தியது. தற்போது கோ ஃபர்ஸ்ட் நிறுவனமும் நிதி நெருக்கடியால் நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்கு உள்ளாகி இருக்கிறது.

இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், பொதுவாக ஒரு நிறுவனம் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும்பட்சத்தில், அந்நிறுவனத்துக்குக் கடன் வழங்கிய நிதி நிறுவனங்கள் அந்த நிறுவனத்தை திவால்நடவடிக்கைக்கு உட்படுத்தி தங்கள் கடன் தொகையை மீட்டுத் தர வேண்டும் என்று தேசிய நிறுவனத்தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்வது வழக்கம். ஆனால், கோ ஃபர்ஸ்ட் நிறுவனமோ தாமாகவே முன்வந்து திவால் நடைமுறைக்கு விண்ணப்பித்துள்ளது.

விமானத் துறையில் ஒரு நிறுவனம் தாமாக முன்வந்து திவால் நடைமுறைக்கு விண்ணப்பிப்பது இதுவே முதல்முறை. கடந்த வியாழக்கிழமை கோ ஃபர்ஸ்ட் விண்ணப்பத்தை தேசிய நிறுவனத் தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டு திவால் நடைமுறையை தொடங்கியுள்ளது.

என்னதான் பிரச்சினை? - கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் அதன் விமானங்களுக்குத் தேவையான இன்ஜின்களை, அமெரிக்காவைச் சேர்ந்தபிராட் அண்ட் விட்னி (பிடபிள்யூ) நிறுவனத்திடமிருந்து வாங்கி வந்துள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவற்றில் சில இன்ஜின்கள் பழுதடைந்துள்ளன. மாற்று இன்ஜின்கள் வழங்குவதில் பிடபிள்யூ நிறுவனம் தாமதம் செய்துள்ளது. இதனால், தங்கள் விமான சேவையை குறைக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டதாக கோ ஃபர்ஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிடபிள்யூ, உலக அளவில் இன்ஜின் தயாரிப்பில் முக்கிய நிறுவனமாக உள்ளது. இந்திய ராணுவ விமானங்கள் சிலவற்றில் பிடபிள்யூ இன்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சமீபகாலமாக பிடபிள்யூ இன்ஜின்களின் செயல்பாடு சார்ந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. பிடபிள்யூ இன்ஜின்களை பயன்படுத்தி வந்த இண்டிகோ நிறுவனம், அதன் இன்ஜின்களில் அடிக்கடி பழுது ஏற்பட்ட நிலையில் தற்போது வேறு நிறுவனத்திடமிருந்து இன்ஜின்கள் வாங்கி வருகிறது.

ஆனால், கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் முழுமையாக பிடபிள்யூ இன்ஜின்களை சார்ந்து இருந்தது. அதுவே, கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் சரிவுக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்திடம் மொத்தம் 54 விமானங்கள் இருந்தன. இவற்றில் 2022 ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, இன்ஜின் கோளாறு காரணமாக 13 விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது அந்த எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

2022 ஏப்ரல் மாதம் வாரத்துக்கு 2,771-ஆக இருந்த கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் விமான சேவை நடப்பு ஆண்டு ஏப்ரலில் 1,362 ஆக குறைந்துள்ளது. இதனால் அந்நிறுவனத்துக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் விமான நிலையங்களுக்கான கட்டணம் செலுத்துவதிலும் நெருக்கடியைச் சந்தித்து வந்தது.

கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் மொத்த கடன் ரூ.11,463 கோடியாக உள்ளது. இதில் வங்கி உட்பட நிதி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய கடன் ரூ.6,521 கோடி ஆகும். இதைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் கோ ஃபர்ஸ்ட் உள்ளது. இந்தச் சூழலிலே அந்நிறுவனம் திவால் நடைமுறைக்கு விண்ணப்பித்துள்ளது.

திவால் நடைமுறையில் என்ன நடக்கும்? - கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் நிர்வாகக் குழு கலைக்கப்படும். அதற்குப் பதிலாக தேசிய தீர்ப்பாயம் சார்பில் இடைக்கால குழு அமைக்கப்படும். இக்குழு, இந்நிறுவனத்தின் கடனை தீர்ப்பதற்கான வழிமுறையை ஆராயும். மேலும், நிறுவனத்தை விற்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும். இதற்கு 180 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். சூழலைப் பொறுத்து 330 நாட்களாக நீட்டிக்கப்படும்.

ஒரு நிறுவனம் திவால் நடைமுறைக்கு உட்படுத்தப்படும்பட்சத்தில், அந்நிறுவனம் மீது நிதி விவகாரம் சார்ந்து நடவடிக்கை எடுக்க முடியாது. அதாவது, கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் சொத்துகள், திவால் நடைமுறை முடியும் வரை அப்படியே இருக்கும். அதை அமலாக்கத் துறை பறிமுதல் செய்ய முடியாது.

கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் 5000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களின் வேலை கேள்விக்குறியாகியுள்ளது. திவால் நடைமுறை முடியும் வரையில் கோ ஃப்ர்ஸ்ட் நிறுவனத்திலிருந்து யாரும் பணி நீக்கம்செய்யப்படமாட்டார்கள் என்று திவால் நடைமுறையின் கீழ் அமைக்கப்பட்ட இடைக்கால குழு தெரிவித்துள்ளது.

சிக்கலில் ஸ்பைஸ்ஜெட்: கோ ஃபர்ஸ்ட் மட்டுமல்ல, ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் சிக்கலில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. கடந்த வாரம், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் குத்தகைதார நிறுவனங்கள், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை திவால் நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று தேசிய நிறுவனத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இது ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்குச் சிக்கலாக எழுந்துள்ளது. எனினும், தாங்கள் திவால் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டிய சூழலில் இல்லை என்று ஸ்பைஸ்ஜெட் தெரிவித்து இருக்கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in