

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள், அந்த திட்டத்தின் ‘மொத்தச் செலவு விகிதம்' எவ்வளவு என்பதை கவனிக்க வேண்டியது அவசியம். மொத்த செலவு விகிதம் என்பது, தினசரி அடிப்படையில் குறிப்பிட்ட திட்டத்தின் நிகர சொத்து மதிப்பில் (என்ஏவி) அனைத்தையும் உள்ளடக்கிய செலவாக குறிப்பிட்ட சதவீத தொகை பற்று வைக்கப்படும்.
அதாவது மியூச்சுவல் ஃபண்ட்திட்டத்தில் ஓவ்வொரு நாளும் அதன் என்ஏவி அடிப்படையில் அதன் மூலதனத்திலிருந்து அந்த குறிப்பிட்ட சதவீதத்தில் நிதி எடுக்கப்படும். இது முதலீட்டாளருக்கான செலவாகும். செலவு விகிதம் என்பது நிதி மேலாண்மை, பதிவு, நிர்வாகம், சந்தை மற்றும் விளம்பரம் ஆகிய அனைத்து செலவுகளின் கூட்டுத்தொகையாகும்.
இந்த செலவு தினசரி என்ஏவி அடிப்படையில் மொத்த நிதியில் தினசரி பற்று வைக்கப்படுவதால் ஓவ்வொரு நாளும் புதிதாக சேமிப்பில் சேர்பவர்களுக்கோ அல்லது தினசரி வெளியேறுபவர்களுக்கோ எந்தவிதமான பாதிப்போ அல்லது லாபமோ கிடையாது. இந்த மொத்த செலவு விகிதத்திற்கு செபி அமைப்பு சில அதிகபட்ச வரம்பை நிர்ணயித்துள்ளது. இது அந்த திட்டத்தின்மொத்த முதலீட்டையும் அது பங்கு நிதியா அல்லது கடன் நிதியா என்பதைப் பொருத்தும் அமையும்.
உதாரணமாக பங்கு நிதி ரூ.500 கோடிக்குள் இருந்தால் செலவு விகிதம் 2.25 சதவீதம் வரை இருக்கலாம். அடுத்த ரூ.250 கோடிக்கு 2 சதவீதம் வரை இருக்கலாம். மொத்த செலவு விகிதம் நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் இருக்கும் வரை, எந்த குறிப்பிட்ட வகை அனுமதிக்கப்பட்ட செலவுக்கும் வரம்பு இல்லை. இந்த மொத்த செலவு விகிதத்தில் ஒரு சிறிய வித்தியாசம் கூட நீண்டகால முதலீட்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
எடுத்துக்காட்டாக 2.5% மொத்த செலவின விகிதத்தில் நீங்கள் ரூ.10,000 முதலீடு செய்திருந்தால், சராசரியாக 10% வருடாந்திர லாபம் என்று வைத்துக் கொண்டால், உங்கள் ஃபண்டின் மதிப்பு 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.51,524 ஆக இருக்கும். ஆனால் அதே தொகையை 0.5 சதவீத செலவு விகிதத்தில் இதேபோன்ற வேறொரு நிதியில் முதலீடு செய்திருந்தால், 20 ஆண்டுகளுக்குபிறகு உங்கள் ஃபண்டின் மதிப்பு ரூ.64,122 ஆக இருக்கும்.
இந்த வித்தியாசம் சுமாராக 20 சதவீதம் ஆகும். இந்த மொத்த செலவு முதலீட்டாளரின் லாபத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு ஃபண்ட் ஒரு வருடத்தில் 10 சதவீதம் லாபம் ஈட்டுவதாக வைத்துக்கொண்டால், அதன் மொத்த செலவு 2 சதவீதமானால், அதன் பொருள் அது ஈட்டுவதில் 20சதவீதம் கட்டணமாக எடுத்துக்கொள்கிறது. மேலும் நிதி லாபம் ஈட்டவில்லையென்றாலும் இந்த செலவு பற்று வைக்கப்படும். இது முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு இழப்பாகும்.
கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள்: எக்ஸ்செஞ் ட்ரேடட் ஃபண்ட்களில் பொதுவாக செலவு சதவீதம் குறைவு. இந்த ஃபண்ட்களில் ஃபண்ட் மேலாளர் ஒரு குறிப்பிட்ட இன்டெக்ஸை சார்ந்து அதேபோல் பங்குகளை வாங்குவதால் அவருக்கு ஆராய்ச்சி செய்து எந்த பங்குகளையும் வாங்குவதற்கோ அல்லது விற்பதற்கோ சாத்தியம் கிடையாது. ஆதலால் செலவு குறைவு. முதலீட்டாளர்கள் இதுபோன்று ஃபண்ட்களில் முதலீடு செய்தால் செலவு குறையும்.
செபியின் நிர்ணயிக்கப்பட்ட செலவு ‘அஸெட்ஸ் அண்டர் மேனேஜ்மென்ட்' அளவைப் பொறுத்து மாறுபடும். ஓவ்வொரு அதிக அடுக்குக்கும் குறைவான சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே அதிக நிதியை கையாளும் மியூச்சுவல் ஃபண்ட்களில் செலவு குறையும். அதுபோன்ற ஃபண்ட்களை தேர்வு செய்யலாம். இந்த அனுமதிக்கப்பட்ட செலவு சதவீதம் தவிர, நகரத்திற்கு வெளியே உள்ள மக்களை மியூச்சுவல் ஃபண்டில் இணைப்பதற்காக சில காரணிகளுக்கு உட்பட்டு 30 அடிப்படை புள்ளி அளவுக்கு அதிக செலவும் அனுமதிக்கப்படுகிறது.
மியூச்சுவல் ஃபண்ட்களால் வசூலிக்கப்படும் கட்டணங்கள் மற்றும் செலவுகள் பற்றிய விரிவான ஆய்வை செபி கடந்த ஆண்டு தொடங்கியுள்ளது. இதன் அடிப்படையில் செபி சில புதிய வரைமுறைகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட்களின் மொத்த செலவு சதவீதத்தை கணக்கில் கொள்வது அவசியம்.
- ஓய்வு பெற்ற வங்கியாளர்