

டாடா குழுமம், தனது நிறுவனங்களுக்குத் தேவையான தகவல் தொழில்நுட்ப தரவுகளை செயலாக்குவதற்காக ரூ.50 லட்சம் முதலீட்டில் 1968-ல் உருவாக்கிய நிறுவனம்தான் டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் (TCS). எந்த துறையாக இருந்தாலும் அதில் டாடா நிறுவனம் ஈடுபடும்போது அர்ப்பணிப்புடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது என்பதை நிலை நிறுத்தும் ஒரு புத்தகம்தான் The TCS Story and Beyond.
தடைகள் அனைத்தையும் தாண்டி டிசிஎஸ்இன்று உலக அளவில் தகவல் தொழில்நுட்ப மேலாண்மையில் தனக்கென ஒரு தனிஇடத்தை பிடித்திருக்கிறது. அந்த காலகட்டத்தில் கணினி பயன்பாடு என்பது ராணுவத்திற்கு மட்டுமே சார்ந்தது என்பதால் கணினியைப் பயன்படுத்தி என்ன செய்கிறோம் என அரசுக்கு எழுத்து மூலமாக தெரிவிக்கவேண்டும்.
பல்வேறு விதமான சான்றிதழ்கள் மற்றும் அனுமதி தேவை என பல வழிகளிலும்நிறுவனம் அலைக்கழிக்கப்பட்டது. லைசென்ஸ்ராஜ்ஜிய காலத்தில் தொடங்கப்பட்ட டிசிஎஸ் நிறுவனத்திற்கு தேவையான கம்ப்யூட்டர்களை இறக்குமதி செய்வதற்கு, கிட்டத்தட்ட 2 ஆண்டு காலம் பிடித்ததாம்.
அதிலும் நிதி, வர்த்தகம், பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதிகளை பெற்றதற்கு பின்னரேஇறக்குமதி உரிமம் கிடைக்கும்.இவற்றை எல்லாம் செய்து முடிப்பதற்குள் கணினி உலகம் வேகமாக மாறி இருக்கும். ஆனால், டிசிஎஸ் எப்போதும் நவீனமான இயந்திரங்களை வாங்குவதையே விரும்பியது. பெரும்பாலும் பழைய தொழில்நுட்பத்தை கொண்டுவந்து குவிக்கும் இடமாகவே இருந்த இந்தியாவிற்கு, டிசிஎஸ் ஒரு புதிய பாதையை உருவாக்கியது.
கம்ப்யூட்டர்களை இறக்குமதி செய்யும்போது அந்த இயந்திரங்களை அவற்றிற்குரிய வகைப்படுத்தல் போன்றவற்றை சரி செய்து, கணினிசாதனங்களின் சுங்க வரி சீரமைப்பிற்கு டிசிஎஸ் ஒரு முன்னோடியாக செயல்பட்டிருப்பது மிக விரிவாக இந்த புத்தகத்தில்குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் சிற்பி என்று அழைக்கப்படும் பாகிர் சந்த் கோஹ்லி என்பவரை அடுத்து, இந்த புத்தகத்தின் ஆசிரியரான எஸ்.ராமதுரை, 1996 முதல் 2009 வரை டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், நிர்வாக இயக்குநராகவும் (நாக்பூரில் பிறந்தவர் என்றாலும் பூர்விகம் தமிழ்நாடு), 2014 வரை துணைத் தலைவராகவும் இருந்தவர். இன்று 46 நாடுகளில் 6 லட்சம் ஊழியர்களைக் கொண்டு ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.2 லட்சம் கோடி வருமானம் ஈட்டும் நிறுவனமாக டிசிஎஸ்ஸை மாற்றியதில் ராமதுரையின் பங்கு குறிப்பிடத்தக்க ஒன்று.
40 ஆண்டு காலம் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ராமதுரை, நாட்டின் மிகவும் மரியாதைக்குரிய வணிகத் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். டிசிஎஸ் நிறுவனத்தின் அசாதாரண வெற்றிக்கான படிகளை விவரிப்பதோடு அவர் மேற்கொண்ட தரமான முன்முயற்சிகள் தேசிய அளவிலான எந்த ஒரு கட்டமைப்பிற்கும் பயன்படுத்தப்படலாம்.
நேரம் நன்றாக இருந்தால் எல்லாம் சரியாக நடக்கும் என்பது போலத்தான் மிகப்பெரும் சம்பளத்தில் அமெரிக்காவில் பணிபுரிந்த ராமதுரை வெறும் 1,000 ரூபாய் சம்பளத்திற்கு ஒரு புரோகிராமர் ஆக 1972-ல்டிசிஎஸ் நிறுவனத்தில் இணைந்தார். அவர் தனது குருவாக மதிப்பது கோஹ்லியைத்தான்.
வாடிக்கையாளர்களுக்கு குறைவான வாக்குறுதி கொடுத்து அதிகமாக செய்து கொடுக்க வேண்டும் என்பதுதான் அவரிடம் கற்றுக்கொண்ட முக்கியமான விஷயம் எனக் குறிப்பிடுகிறார். நாம் சொல்வது சரிதான் என்று நமக்கு உறுதியாக தெரிந்திருந்தால், மேலதிகாரி சொல்வதை மறுத்தும் பேச முடியும். மேலதிகாரிகள் மீது பயம் கலந்த மரியாதை இருக்கிறது என்பதற்காக, நமது அபிப்பிராயங்களை சொல்லாமல் இருக்கக் கூடாது என்கிறார் ராமதுரை.
ஒரு நிறுவனத்தின் வெற்றி அதனுடைய வருவாய், லாபம் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதற்கு பதிலாக பணியாளர்கள் எண்ணிக்கை, ஒரு வாடிக்கையாளர் மூலம் பெறக்கூடிய வருமானம், அதில் கிடைக்கக்கூடிய லாபம் போன்றவற்றை கணக்கிட்டது டிசிஎஸ்.இதன் அடிப்படையில் 2010-ல் டிசிஎஸ் டாப் 10 நிறுவனங்களுக்குள் ஒன்றாகஇருக்க வேண்டும் என்பதை லட்சியமாக முன்வைத்தது.
ஆனால்,2009-ம் ஆண்டிலேயே மென்பொருள் சேவை துறையில் முதல் பத்துநிறுவனங்களில் ஒன்றாக டிசிஎஸ் இடம் பிடித்தது. அதுவும் தான் ஓய்வு பெறுவதற்கு முன்னரேஇது நடந்தது என்பதை தனிப்பட்ட முறையில்மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துகிறார் ராமதுரை.
மேலும் வெளிநாடுகளிலும் நிதி சந்தைகளுக்கு தேவையான மென்பொருள்களை டிசிஎஸ் உருவாக்கி கொடுத்தது.ஸ்விஸ் தேசிய வங்கி, ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கிபோன்ற உலகளாவிய வங்கிகளின் கணினிஅமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்தங்கள் டிசிஎஸ்க்கு கிடைத்தது பற்றியும், அவற்றின் மூலம் கற்றுக்கொண்ட அனுபவங்களும் விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் நிதித்துறை மற்றும் வங்கி அமைப்புகள் உலகத்தரமானவைஎனக் கூறுவதற்கு காரணம் அதில் பயன்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பங்கள்.
டிசிஎஸ் முதன் முதலாகபங்கு வெளியீட்டை 2004-ம்ஆண்டில் மேற்கொண்ட போது மந்தமான பொருளாதார சூழ்நிலை நிலவியது. ஆனாலும்7.7 மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் வந்திருந்தன.
அதேநேரத்தில் ஊழியர்களுக்கும் அவர்களின் பங்களிப்பு, பணி காலம் அடிப்படையில் குறிப்பிட்ட அளவு பங்குகள் ஒதுக்கப்பட்டன. ஊழியர்களின் அறிவாற்றல் தான் டிசிஎஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடு.
டாடா நிறுவனம் மேற்கொண்டிருக்கும் வணிகங்களில் ஆதாரமாகக் கொண்டிருக்கும் 5 முக்கிய அம்சங்கள்; நேர்மை, புரிதல், தனிச்சிறப்பு, ஒற்றுமை, பொறுப்பு ஆகியவைஆகும். தாங்கள் செயல்பட்டு வரும் சமூகத்திற்கு, ஈட்டிய செல்வத்தை திருப்பித்தர வேண்டும் என்ற லட்சியம் டாடா நிறுவனத்திற்கு ஆரம்ப காலத்திலிருந்தே இருந்து வருகிறது.
மென்பொருள் சேவைகளில் நேர்மைதான் ஆதாரமான அம்சம். வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கை சமூகநல செயல் திட்டங்களுக்கு செலவிடும் நிறுவனம் டாடாவை தவிர ஏதும் இல்லை என்கிறார் ராமதுரை.
டிசிஎஸ் நிறுவனத்தை உலகத்தகவல் தொழில்நுட்ப மென்பொருள் மற்றும் சேவை நிறுவனமாக மாற்றுவதற்காக ராமதுரையும் அவரது குழுவினரும் பாடுபட்டதன் கதை இது என்றாலும், பட்டிதொட்டியில் இருக்கும் பள்ளிபிள்ளைகள் வரை அனைவருக்கும் இன்று கணினி பயன்பாடு சாத்தியம் என்பதில் ஒரு நிறுவனம் என்ற முறையில் டிசிஎஸ் எடுத்த முன்னெடுப்புகள் பற்றிவிவரமாக தெரிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவியாக இருக்கும்.
- சுப.மீனாட்சி சுந்தரம் | somasmen@gmail.com